Published : 22 Feb 2018 01:50 PM
Last Updated : 22 Feb 2018 01:50 PM

கழிப்பறையையும் விட்டு வைக்காத அதிமுக ஊழல்; விசாரணை தேவை: அன்புமணி

சென்ற இடமெல்லாம் ஊழல். நின்ற இடமெல்லாம் ஊழல் என்ற அவலத்தின் அடையாளச் சின்னமாக தமிழகத்தை மாற்றி விட்ட அதிமுக அரசு, தூய்மை இந்தியா திட்டப்படி கழிப்பறை கட்டுவதிலும் மிகப் பெரிய அளவில் ஊழல் செய்து கொண்டிருக்கிறது. என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அன்புமணி வெளியிட்ட அறிக்கை:

''இந்தியாவில் திறந்த வெளியில் மலம் கழிப்பதுதான் ஏராளமான நோய்கள் பரவக் காரணமாக உள்ளது என்பதால் அதைத் தடுக்கும் நோக்கத்துடன் அனைத்து வீடுகளுக்கும் இலவசமாக கழிப்பறை கட்டித் தரும் திட்டம் மத்திய, மாநில அரசுகளின் நிதி உதவியுடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டப்படி ஒரு வீட்டில் கழிப்பறை கட்ட ரூ.12,000 மானியமாக வழங்கப்படுகிறது. இதில் 7,200 ரூபாயை மத்திய அரசும், 4,800 ரூபாயை மாநில அரசும் வழங்குகின்றன. கடந்த பல ஆண்டுகளாக பல்வேறு பெயர்களில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வந்தாலும், தூய்மை இந்தியா திட்டம் அறிவிக்கப்பட்ட பிறகு இத்திட்டத்துக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டு, மிகவும் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின் வேகத்தை விட இத்திட்டத்தைப் பயன்படுத்தி மக்கள் பணத்தைக் கொள்ளையடிப்பது தான் வேகமாக நடைபெறுகிறது. வீடுகளில் கழிப்பறை அமைப்பதற்கான திட்டம் உள்ளாட்சி அமைப்புகள் மூலமாகத் தான் செயல்படுத்தப்படுகின்றன. இத்திட்டத்திற்கான மானியம் இரு கட்டங்களாக பயனாளிகளுக்கு ஒதுக்கப்படுகிறது. அதைக் கொண்டு இதற்கான பணிகளை மக்கள் மேற்கொள்ள வேண்டும். இந்தத் திட்டத்தில் 3 வழிகளில் ஊழல் நடப்பது தெரியவந்துள்ளது.

முதலாவதாக, வீடுகளில் ஏற்கெனவே கட்டப்பட்ட கழிப்பறைகளுக்கு வண்ணம் பூசி புதிதாக கட்டப்பட்ட கழிப்பறையாக கணக்கு காட்டும் அதிகாரிகளும், ஆளுங்கட்சியினரும் அதற்கான மானியம் 12,000 ரூபாயில் 3,000 ரூபாயை மட்டும் பயனாளிகளுக்கு கொடுத்துவிட்டு, மீதமுள்ள பணத்தை தாங்களே சுருட்டிக் கொள்கிறார்கள்.

இரண்டாவதாக, கழிப்பறை கட்டப்படாத வீடுகளுக்கு அவற்றை கட்டித் தராமல், அருகிலுள்ள வீடுகளின் கழிப்பறை முன் அவர்களை நிறுத்தி புகைப்படம் எடுத்துக்கொண்டு அவர்களுக்கு கழிப்பறை கட்டித் தரப்பட்டதாக கணக்கு காட்டுகிறார்கள்.

இதிலும் அப்பாவி மக்களுக்கு 3,000 ரூபாயை கொடுத்து விட்டு, மீதமுள்ள பணம் சுருட்டப்படுகிறது. வேறு சில இடங்களில் ரூ.12,000 செலவில் கழிப்பறைகளை கட்டித் தருவதாக உறுதியளிக்கும் அதிகாரிகள் தொட்டால் விழுந்து விடும் அளவுக்கு பலவீனமாக கழிப்பறை கட்டி, அதில் பெயரளவுக்கு மலம் கழிக்கும் நீர்க்குழாய் தொகுதியை பொருத்தி விட்டு, அத்துடன் தங்கள் பணி முடிந்து விட்டதாகவும், மற்ற வசதிகளை சொந்த செலவில் தான் செய்து கொள்ள வேண்டும் என்றும் கூறி விடுகின்றனர்.

அதில் தண்ணீர் ஊற்றுவதற்குக் கூட வசதி இல்லை என்பதால் அதை மக்கள் பயன்படுத்துவதில்லை. சில இடங்களில் கழிப்பறை வெறும் 2 அடி அகலத்திற்கு மட்டுமே அமைக்கப்படுவதால் அதில் தனிநபர்கள் அமருவதற்கு கூட வசதி இருக்காது. இதற்காக ஒதுக்கப்படும் நிதியில் மூன்றில் ஒரு பங்கை மட்டும் செலவழித்து விட்டு, மீதமுள்ள பணத்தை ஆளுங்கட்சி, அதிகாரிகள் கூட்டணி சுருட்டிக் கொள்கிறது.

இவ்வகையில் மட்டும் தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் பல நூறு கோடிகள் கொள்ளையடிக்கப்படுகிறது. அதுமட்டுமின்றி, எந்த நோக்கத்திற்காக இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறதோ, அந்த நோக்கமும் நிறைவேறுவதில்லை.

பல வீடுகளில் கழிப்பறைகள் கட்டப்படுவதில்லை; சில வீடுகளில் கட்டினாலும் அவை பயன்பாட்டுக்கு ஏற்றதாக இல்லை என்பதால் திறந்தவெளிகளில் மலம் கழிக்கப்படுவதும், அதனால் நோய்கள் பரவுவதும் தொடர்கதையாகி வருகின்றன.

இதனால் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் வீடுகளுக்கு கழிப்பறை கட்டித் தரும் திட்டத்தின் நோக்கமே தமிழகத்தில் கேள்விக்குறியாகி வருகிறது. வீடுகளுக்கு கழிப்பறை கட்டித் தரும் திட்டம் மிகவும் உன்னதமான திட்டம் என்பதிலும், முழு சுகாதாரத்தை உறுதி செய்வதற்கான முதன்மையான கருவி இது தான் என்பதிலும் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.

ஆனால், அறுவை சிகிச்சை செய்வதற்கான கத்தி கூட கொலைகாரனின் கைகளில் கிடைத்தால், உயிரைக் காப்பதற்கான அந்தக் கருவி கொலைக் கருவியாக மாறுவதைப் போல, மிகச் சிறப்பான இத்திட்டம் ஊழல்வாதிகளிடம் சிக்கி மிக மோசமானத் திட்டமாக மாறியிருக்கிறது.

இத்திட்டத்தின் பயனாளிகளிடம் விசாரித்தாலே இதில் எந்த அளவுக்கு ஊழல் நடைபெற்றிருக்கிறது என்பதை உணர்ந்து கொள்ள முடியும். இத்திட்டத்தை உருவாக்கியதும், இதற்கான நிதியில் 60 விழுக்காட்டை ஒதுக்குவதும் மத்திய அரசு தான்.

மாநில அரசு மூலம் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது என்பதாலேயே ஆளுங்கட்சியினர் ஊழல் செய்வதை அனுமதிக்கக்கூடாது. இது பிரதமர் நரேந்திர மோடியின் விருப்பமானத் திட்டம், இதில் அவர் தனிக்கவனம் செலுத்தி வருகிறார்.

ஆனால், இத்திட்டத்தின் நோக்கத்தையே சிதைக்கும் வகையில் ஊழல்கள் பெருக்கெடுத்திருப்பதால் பிரதமர் மோடி இதில் தலையிட்டு, கழிப்பறைகள் திட்டத்தில் நடந்த ஊழல் குறித்து விசாரணை நடத்தி, ஊழல்வாதிகளை தண்டிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.”

இவ்வாறு அன்புமணி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x