Published : 10 Feb 2018 07:14 AM
Last Updated : 10 Feb 2018 07:14 AM

கோயில்களில் பாதுகாப்புக்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகளை 3 மாதத்தில் அகற்ற உத்தரவு: அறநிலையத் துறை அமைச்சர் ராமச்சந்திரன் தகவல்

கோயில்களின் பாதுகாப்புக்கு இடையூறாக கோயில் வளாகம் மற்றும் சுற்றுப்புறங்களில் உள்ள அனைத்து ஆக்கிரமிப்புகளையும் 3 மாதங்களுக்குள் அகற்ற அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்று இந்துசமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் கூறினார்.

கோயில்களில் செய்யப்பட்டுள்ள தீத்தடுப்பு நடவடிக்கைகள், கோயில் கட்டுமானங்களின் உறுதித் தன்மை குறித்த ஆய்வுக் கூட்டம் இந்துசமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் தலைமையில் சென்னையில் நேற்று நடந்தது. நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்துசமய அறநிலையத் துறை ஆணையர் அலுவலகத்தில் நடந்த இக்கூட்டத்தில் ஆணையர் ஆர்.ஜெயா, கூடுதல் ஆணையர்கள் ந.திருமகள், ம.கவிதா, அர.சுதர்சன், மண்டல இணை ஆணையர்கள், கோயில்களின் இணை ஆணையர்கள், செயல் அலுவலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

முன்னதாக செய்தியாளர்களிடம் அமைச்சர் ராமச்சந்திரன் கூறியதாவது:

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சமீபத்தில் ஏற்பட்ட தீ விபத்து மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இனி வரும் காலங்களில் எந்தக் கோயிலிலும் இதுபோன்ற அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படும். அதற்கு தேவையான அறிக்கையை உடனடியாக சமர்ப்பிக்க அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், கோயில்களின் கட்டிட உறுதித்தன்மை, மின்சார இணைப்புகளின் உறுதித்தன்மை ஆகியவற்றை ஆய்வு செய்ய குழுக்கள் ஏற்படுத்தப்படும். கோயில் வளாகங்கள், சுற்றுப்புறங்களில் கோயில் பாதுகாப்புக்கு இடையூறாக உள்ள அனைத்து ஆக்கிரமிப்புகளையும் 3 மாதங்களுக்குள் அகற்ற அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் தொடர் பாதுகாப்புக்காக உடனடியாக ஒரு ஆய்வு குழுவை அமைத்து கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதேபோல இந்துசமய அறநிலையத் துறை சார்பாகவும் ஆய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்த குழுக்களின் அறிக்கை அடிப்படையில் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் உரிய பராமரிப்பு பணிகள் உடனடியாக மேற்கொள்ளப்படும். கோயில் உட்புறத்தில் இருந்த அனைத்து கடைகளையும் அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது.

கடைகள் அகற்றப்படும்

கோயில்களுக்கு சொந்தமான இடங்களைப் பொறுத்தவரை, கடந்த 7 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளால், தனியாரால் ஆக்கிரமிக்கப்பட்ட 2,653 ஏக்கர் நிலம் மற்றும் மனைகள், கட்டிடங்கள் என ரூ.3,354 கோடி மதிப்பிலான சொத்துகள் மீட்கப்பட்டுள்ளன.

இதேபோல, கோயில்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கோயில் நிலங்களில் அரசு அலுவலகங்கள் அனுமதி பெற்று இயங்கி வந்தால் அவற்றை அகற்ற முடியாது. அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டிடங்கள் இடிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x