Published : 21 Feb 2024 03:35 PM
Last Updated : 21 Feb 2024 03:35 PM
சென்னை: "தமிழ்க் கடவுள் முருகனுக்கு பெருமை சேர்க்கின்ற ஆட்சி, தமிழக முதல்வரின் ஆட்சியாகும்" என்று சட்டப்பேரவையில், கேள்வி நேரத்தின்போது பேசிய இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் வியாழக்கிழமை நடந்த கேள்வி நேரத்தின்போது, மேட்டூர், பாபநாசம், திருவள்ளூர், கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏக்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு இந்துசமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு பதிலளித்தார். அப்போது பாபநாசம் தொகுதி எம்எல்ஏ ஜவாஹிருல்லா, “திருவலஞ்சுழி வெள்ளவிநாயகர் கோயிலுக்கு புதிய தேர் வடிவமைப்பதற்கும், சிதலமடைந்து இருக்கின்ற தேர் மண்டபத்தை சீரமைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படுமா?” என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் சேகர்பாபு, "தமிழக முதல்வரின் ஆட்சியில் முருகப்பெருமானின் அறுபடை வீட்டுக்கு அவர் சேர்த்திருக்கின்ற பெருமையை கூற விரும்புகிறேன். திருச்செந்தூர் திருக்கோயிலில் 300 கோடி ரூபாய் அளவுக்கு திருப்பணிகளை மேற்கொண்டு வருகிறது. மறைந்த முதல்வர் கருணாநிதியின் ஆட்சி காலத்தில் 2010-ம் ஆண்டு பழனியில் ரூ.58 கோடி மதிப்பிலான 58 ஏக்கர் நிலப்பரப்பு பக்தர்களின் நலன்கருதி எதிர்கால சேவைக்கு கையகப்படுத்துவதற்கு பிறப்பிக்கப்பட்ட ஆணைக்கு செயல் வடிவம் தந்த ஆட்சி திமுக ஆட்சி.
திருப்பரங்குன்றம் மற்றும் திருநீர்மலை திருக்கோயில்களுக்கு இந்த நிதிநிலை அறிக்கையிலேயே சுமார் 26 கோடி ரூபாய் செலவில் ரோப் கார் ஏற்படுத்தப்படும் என்ற அறிவிப்பை தந்ததும் இந்த ஆட்சிதான். அறுபடை வீடுகளுக்கு ஒரே நேரத்தில் சென்று சாமி தரிசனம் செய்ய விரும்பிய வயது முதிர்ந்த பக்தர்களின் ஏக்கத்தை அறிந்து முதல்வர், இந்து சமய அறநிலையத்துறையின் வரலாற்றில் ஒரு புரட்சியாக அறுபடை வீடுகளுக்கு ஆண்டுக்கு 60 வயது முதல் 70 வயதுக்குட்பட்ட 1,000 பக்தர்களை அழைத்துச் செல்ல வேண்டும் என்ற உத்தரவிட்டு அதற்குண்டான நிதி ரூ.1.58 கோடியை அரசின் சார்பில் வழங்கினார்.
அதன்படி முதற்கட்டமாக 207 பக்தர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர். இரண்டாம் கட்டமாக மார்ச் 7-ம் தேதி 200 பக்தர்கள் அழைத்துச் செல்லப்பட உள்ளனர். தமிழ்க் கடவுள் முருகனுக்கு பெருமை சேர்க்கின்ற ஆட்சி தமிழக முதல்வரின் ஆட்சியாகும். எம்எல்ஏ ஜவாஹிருல்லா கோரிய வெள்ளைவிநாயகர் திருக்கோயில் திருப்பணிக்கு ரூ.4.55 கோடி அரசு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. அத்திருக்கோயிலுக்கு புதிய திருத்தேர் உருவாக்குவதற்கும், தேர் மண்டபத்தினை சீரமைப்பதற்கும் சாத்திய கூறுகள் ஆராயப்பட்டும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்று அமைச்சர் சேகர்பாபு கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT