

சென்னை: புகழ்பெற்ற சட்டவியல் அறிஞரும் முன்னாள் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலுமான பாலி நரிமன் மறைவையொட்டி தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வர் ஸ்டாலின் இது குறித்து வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “புகழ்பெற்ற சட்டவியல் அறிஞரும் முன்னாள் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலுமான பாலி நரிமன் மறைந்த செய்தியறிந்து மிகவும் வருந்தினேன். வழக்கறிஞராக எழுபதாண்டுகளுக்கும் மேலான தனது பயணத்தில் சுமார் ஐம்பதாண்டுகள் அவர் உச்ச நீதிமன்றத்தில் வாதாடியுள்ளார் என்பது வரலாற்றுச் சிறப்புமிக்கதும், குறிப்பிடத்தகுந்த ஒன்றும் ஆகும்.
பல முக்கியத் தீர்ப்புகளுக்குக் கருவியாக விளங்கிய பாலி நரிமன் சட்டவியலுக்கு ஆற்றிய பங்களிப்புகள் தலைமுறை தலைமுறைகளுக்கும் நினைவுகூரப்படும். அன்னாரை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் சக வழக்கறிஞர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.