Published : 21 Feb 2024 11:56 AM
Last Updated : 21 Feb 2024 11:56 AM

சமூக வலைதளங்களில் இணைந்தார் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்

சென்னை: தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பெயரில் புதிதாக சமூக வலைதள பக்கங்கள் தொடங்கப்பட்டுள்ளன.

இதுதொடர்பாக பிரேமலதா.விடுத்துள்ள செய்திக்குறிப்பில், “தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும், தொலைக்காட்சி, இணையதள ஊடகங்களுக்கும் மற்றும் அனைத்து ஊடக நண்பர்களுக்கும் வணக்கங்களை தெரிவித்துக் கொள்கிறேன். இன்று (பிப்.21) முதல் அதிகாரபூர்வமான பேஸ்புக், எக்ஸ் தளம், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ் அப் போன்ற சமூகவலைதளங்களை தொடங்கி கட்சி ரீதியான அறிவிப்புகளும், மக்களுக்கான செய்திகளும், தனிப்பட்ட கருத்துக்கள் போன்ற முக்கிய செய்திகள் இந்த நான்கு சமூக ஊடகங்கள் வழியாக உங்களை வந்து அடையும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் உடல்நலக்குறைவால் சமீபத்தில் மறைந்தார். விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டு இருந்ததால் கட்சிப் பணிகளில் தீவிரமாக அவரால் ஈடுபட முடியவில்லை. அவருக்கு பதிலாக அவரின் மனைவி பிரேமலதா விஜயகாந்த் கட்சிப் பணிகளை கவனித்து வந்தார். தொடர்ந்து கடந்த டிசம்பர் மாதம் சென்னை திருவேற்காட்டில் தேமுதிக தலைமை செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் விஜயகாந்த் முன்னிலையில் தேமுதிக பொதுச் செயலாளராக பிரேமலதா விஜயகாந்த் நியமனம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x