

மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் விசிக வேட்பாளர்களுக்கு பொது சின்னமாக பானை சின்னத்தை ஒதுக்க வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன், பொதுச்செயலாளர் துரை.ரவிக்குமார் எம்.பி., எம்எல்ஏ எஸ்.எஸ்.பாலாஜி, துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா ஆகியோர் நேற்று டெல்லியில் உள்ள தலைமைத் தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் திருமாவளவன் கூறியதாவது: முன் அனுமதி பெறாததால் தேர்தல் ஆணையர் யாரையும் சந்திக்க இயல வில்லை. எனினும், அதற்கென உள்ள பிரிவில் மனுவை சமர்ப்பித்துள்ளோம். மக்களவைத் தேர்தலில் தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா, கேரளா ஆகிய தென்னிந்திய மாநிலங்களில் விசிக வேட்பாளர்களை நிறுத்த உள்ளது. எனவே, பானை சின்னத்தை பொது சின்னமாக ஒதுக்க கோரியுள்ளோம்.
கடந்த தேர்தலில் தங்களது சின்னத்தில் போட்டியிட திமுக வலியுறுத்தியது வெற்றியை கருத்தில் கொண்டே தவிர, விசிகவை நசுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இல்லை. பொதுத்தொகுதியில் விசிக போட்டியிடக் கூடாது என்ற எந்த வரையறையும் இல்லை. இது புதிய கோரிக்கையும் அல்ல.
கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் கூட 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. அதே அடிப்படையில் மக்களவைத் தேர்தலிலும் ஒரு பொது தொகுதி ஒதுக்க வேண்டும் என கேட்கிறோம். தேர்தல் ஆணையம் நடுநிலையாக இல்லை என்னும் சரத்பவாரின் கருத்து புறந்தள்ளக் கூடியது அல்ல. அண்மை காலமாக ஆளுங்கட்சியின் தலையீடுகள் இருப்பது போன்ற தோற்றம் இருக்கிறது.
தேர்தல் ஆணையம் தன்னாட்சி அதிகாரம் பெற்ற அமைப்பு. அது அரசியல் தலையீடு இல்லாமல் சுதந்திரமாக செயல்பட வேண்டும் என எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார். பின்னர் ஒரே நாடு ஒரே தேர்தல் உயர்நிலைக் குழுவின் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து, ஒரே நாடு ஒரே தேர்தல் முறையை எதிர்ப்பதாக கட்சியின் நிலைப்பாட்டை திருமாவளவன் தெரிவித்தார்.