

சென்னை: தமிழக அரசு தாக்கல் செய்துள்ள வேளாண் பட்ஜெட்டுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் வரவேற்பும், எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக, அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கைகளில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை: மண்ணுயிர் காப்போம் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தி இருப்பது வரலாற்று சிறப்புமிக்கது. அதே நேரம், கரும்பு, நெல்லுக்கான தொகையை உயர்த்தி வழங்க வேண்டும்.
இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன்: ‘ஒரு கிராமத்துக்கு ஒரு பயிர்’ புதிய திட்டம் 15,280 கிராமங்களில் செயல்படுத்தப்படும் என்பது புதியமுயற்சியாகும். டெல்டா கால்வாய்கள் தூர்வார ரூ.110 கோடி ஒதுக்கப் பட்டுள்ளது வரவேற்கத்தக்கது.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ: இயற்கை விவசாயத்துக்கு இயற்கை உரம் தயாரிக்க 100 குழுக்களுக்கு ரூ.1 கோடி நிதிஉதவி வழங்கப்படும். 10 ஆயிரம்விவசாயிகளுக்கு தலா 2 மண்புழுஉரப் படுக்கைகள் வழங்கிட ரூ.6 கோடி மானியம் போன்ற அறிவிப்புகள் இயற்கைவேளாண் மையை ஊக்கப்படுத்தும்.
காவிரி டெல்டா பாசன விவசாயசங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் கே.வீ.இளங்கீரன்: மண்ணுக்கு புத்துயிர் அளிக்கும் திட்டம் கொண்டு வரப்பட்டது பாராட்டுக்குரியது. 50 ஆயிரம் விவசாயிகளுக்கு மின்சாரம் வழங்கும் அறிவிப்புவரவேற்கத்தக்கது. இயந்திரமய மாக்கல், உயர்விளைச்சல் தரும் விதைகள் வழங்குதல் போன்றவை சிறப்புக்குரியவை. குறைந்தளவு பரப்பில் பயிர் பாதிக்கப்பட்டாலும் காப்பீடு வழங்க வேண்டும் என தமிழக அரசு மூலமாக அழுத்தம் கொடுத்து வருகிறோம்.
பாமக நிறுவனர் ராமதாஸ்: தமிழ்நாடு சட்டப் பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வேளாண்மை நிதிநிலை அறிக்கையில் தமிழக உழவர்களின் எதிர்பார்ப்புகள் ஒன்று கூட நிறைவேற்றப்படவில்லை. ஏற்றத்துக்கு மாற்றாக ஏமாற்றத்தை மட்டுமே வேளாண் நிதிநிலை அறிக்கை வழங்கியுள்ளது.தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை: மண் வள அட்டையை பிரதமர் முன்னரே கொண்டுவந்துள்ளார். அதை மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் தற்போது தான் தமிழக அரசு அறிவிக்கிறது. பிரதமர் பல ஆண்டுகளாக ரசாயன உரத்தை பயன்படுத்த வேண்டாம் என கூறிவருகிறார். மத்திய அரசின் திட்டங்களுக்கு புதிய பெயரை வைத்துபட்ஜெட்டை வெளியிட்டிருக் கின்றனர்.
தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: தமிழக அரசின் வேளாண் பட்ஜெட்டானது உழவர்களின், உழவுத் தொழிலாளர்களின் எண்ணங்களை, எதிர்பார்ப்புகளை நிறைவேற்றவில்லை.
அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்: ‘கடைமடைக்கும் பாசன நீர்’ என்பது ஒட்டுமொத்த விவசாயிகளின் நிறைவேறா ஆசையாகவே உள்ளது. ரூ.10 கோடியில் தூர்வாரும் பணிகள் நடைபெறும் என்ற நம்பிக்கை டெல்டா விவசாயிகளிடம் துளியளவும் இல்லை.
தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: வேளாண் தொழிலை வளர்ச்சி அடைய செய்வதற்கும், உணவு தானிய உற்பத்தியை பெருக்குவதற்கும், உழ வர்களின் வாழ்க்கைத் தரத்தினை முன்னேற்றுவதற்கும் தேவையான திட்டங்கள் எதுவும் இல்லாமல் ஏமாற்றத்தை அளித்துள்ளது..
பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன்: பாதுகாக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களில் தொழிற்சாலைகள் அமைக்க முடியாததால் அங்குள்ளஇளைஞர்களுக்கு வேலைவாய்ப் புக்கு அரசின் திட்டம் என்ன? திமுகவின் தேர்தல் வாக்குறுதியில் அறிவிக்கப்பட்ட ரேஷன் கடையில் தேங்காய் எண்ணெய், கரும்புக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை ரூ.4 ஆயிரம் போன்ற கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை.
இவ்வாறு அவர்கள் தெரிவித் துள்ளனர்.
இதேபோல், வேளாண் பட் ஜெட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக விவசாய அணி மாநில தலைவர் ஜி.கே.நாகராஜ், பெருந் தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், வி.கே.சசிகலா ஆகியோர் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.