Published : 21 Feb 2024 05:12 AM
Last Updated : 21 Feb 2024 05:12 AM
சென்னை: தமிழக சட்டப்பேரவையில் நேற்று வேளாண் பட்ஜெட்டை வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை அமைச்சர் எம்ஆர்கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். அதில் கூறியிருப்பதாவது:
விளை பொருட்களுக்கு விலங்குகளால் ஏற்படும் சேதாரம், விவசாயிகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. எனவே, 2024-25-ம் நிதியாண்டில் ரூ.2 கோடியில் 75 ஆயிரம் மீட்டர் நீளத்துக்கு சூரிய சக்தி மின்வேலிகள் அமைக்கப்படும்.
டெல்டா மாவட்டங்களில் 1.57 லட்சம் ஏக்கர் பயன்பெறும் வகையில், 2,235 கிலோமீட்டர் நீளத்துக்கு சி, டி பிரிவு வாய்க்கால்களைத் தூர்வாரும் பணி ரூ.10 கோடியில் மேற்கொள்ளப்படும்.
திருவண்ணாமலை, விழுப்புரம், திருவள்ளூர், தஞ்சாவூர், தேனி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களுக்கு தானியங்களை உலர்த்துவதற்கான நடமாடும் உலர்த்திகள் ரூ.2.50 கோடியில் வாங்கப்படும்.
மஞ்சள் விவசாயிகள், உற்பத்தியாளர் நிறுவனங்களின் பயன்பாட்டுக்காக மஞ்சளுக்கென 5 மெருகூட்டும் இயந்திரங்களும், 8 மஞ்சள் வேகவைக்கும் இயந்திரங்களும் ரூ.2.12 கோடியில் மத்திய,மாநில அரசு நிதியில் வாங்கப்பட்டு, ஈரோடு, கள்ளக்குறிச்சி, தருமபுரி மாவட்டஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் நிறுவப்படும்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் பலா மதிப்புக் கூட்டுதலுக்கான மையம் ரூ.16.13 கோடியில் ஏற்படுத்தப்படும். பெரம்பலூர் மாவட்டத்தில் சிறுதானியங்களுக்கான தொழில்நுட்ப வணிக மேம்பாட்டு மையம் ரூ.4 கோடியில் அமைக்கப்படும். 2024-25-ல் 100 ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களின் கட்டமைப்பு வசதிகள் ரூ.50 கோடியில் புதுப்பிக்கப்படும்.
10 பொருளுக்கு புவிசார் குறியீடு: தமிழகத்தின் தனித்துவமான 25 வேளாண் விளைபொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற கடந்த 3 ஆண்டுகளில் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. அதேபோல, சத்தியமங்கலம் செவ்வாழை, கொல்லிமலை மிளகு, மீனம்பூர் சீரக சம்பா, ஐயம்பாளையம் நெட்டைத் தென்னை, கிருஷ்ணகிரி உரிகம்புளி, புவனகிரி மிதி பாகற்காய், சேலம் மற்றும் கரூர் செஞ்சோளம், திருநெல்வேலி அவுரி இலை, ஓடைப்பட்டி விதையில்லா திராட்சை, கரூர், திண்டுக்கல் மற்றும் திருப்பூர் செங்காந்தள் விதை ஆகிய 10 பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற, ரூ.30 லட்சம் ஒதுக்கப்படும்.
அப்பீடா பயிற்சி பெற்ற விவசாயிகளை ஏற்றுமதியாளர்களாக மாற்றுவதற்கான உரிய சான்றிதழ்களைப் பெற்றுத்தரும் வகையில், ஒரு நபருக்கு ரூ.15 ஆயிரம் வீதம் ரூ.15 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
விளை பொருட்களின் விற்பனை இணையவழி வர்த்தகத் தளங்களுடன் இணைக்கப்படும். விளைவித்த விவசாயியே, விலை நிர்ணயிக்கும் நிலையை உருவாக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும். ரூ.60 கோடியில் பண்ணை வழி வர்த்தகம் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு, விவசாயிகளின் விளை பொருட்களுக்கு சிறந்த விலை கிடைக்க வழிவகை செய்யப்படும். விவசாயிகளுக்கு வழங்கப்படும் பொருளீட்டுக் கடனின் வரம்பு ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்படும்.
தகுதியுள்ள புத்தாக்க நிறுனவங்களுக்கு மானியம் அளித்து மேம்படுத்திட ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். மூன்று இடங்களில் வேளாண் கண்காட்சிகள் நடத்தப்படும். இதற்காக ரூ.9 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
விதை மரபணுத் தூய்மையை உறுதி செய்வதற்காக, தானியங்கி மூன்றாம் தலைமுறை டிஎன்ஏ மார்க்கர் அடிப்படையிலான தொழில்நுட்பங்களுடன் கூடிய ஆய்வகம் கோவையில் ஏற்படுத்தப்படும். இதற்காக ரூ.9 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT