Published : 21 Feb 2024 05:19 AM
Last Updated : 21 Feb 2024 05:19 AM
சென்னை: பாசன நீரை சிக்கனமாக பயன்படுத்தி பயிர் சாகுபடியை அதிகரிக்க ரூ.773 கோடியில் நுண்ணீர்பாசன அமைப்புகள் அமைக்கப்படும் என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
வேளாண் பட்ஜெட்டில் அவர் கூறியிருப்பதாவது: நடப்பு நிதியாண்டில் ரூ.773.23 கோடியில் 2.22லட்சம் ஏக்கர் பரப்பளவில் நுண்ணீர்பாசன தானியங்கி அமைப்புகள் அமைக்கப்பட உள்ளன. இதற்காக ரூ.25 கோடி ஒதுக்கப்படும்.
நீலம், பெங்களூரா, ருமானி, மல்கோவா, பங்கனப்பள்ளி போன்ற தென்னாட்டு மாம்பழரகங்களை கொண்டு 4,380 ஏக்கரிலும், இமாம் பசந்த், ரத்தினகிரி அல்போன்ஸோ, சிந்து போன்ற ரகங்களை கொண்டு 250 ஏக்கரிலும் புதிதாக மாந்தோப்புகள் உருவாக்கப்படும். குறிப்பாக 26,540 ஏக்கர் பரப்பிலான பழைய மாம்பழ தோட்டங்களை புதுப்பிக்க மானியம் வழங்கப்படும்.நடப்பாண்டில் மாம்பழத்துக்கான சிறப்புத்திட்டம் ரூ.27.48 கோடியிலும், வாழைக்கான சிறப்புத்திட்டம் ரூ.12.73 கோடியிலும் செயல்படுத்தப்படும். அந்தவகையில் மாம்பழங்களின் உற்பத்தியை அதிகரிக்க 6,175 ஏக்கருக்கு செயல் விளக்க திடல்கள் அமைக்கவும், குலை வாழைகள் காற்றில் விழுந்து சேதமடைவதைத் தடுக்க 3,700 ஏக்கரில் கழிவுகளை கொண்டு முட்டுக்கொடுத்தல் மேற்கொள்ளவும் மானியங்கள் வழங்கப்படும்.
விவசாய நிலங்களிலும், தென்னை நாற்றங்கால் மையங்களிலும் தென்னை செயல்விளக்கத் திடல்கள் அமைத்து உற்பத்தியை அதிகரிக்க ரூ.12.50 கோடி ஒதுக்கப்படும். பந்தல் காய்கறிகளை ஊக்குவிக்கும் விதமாக 770ஏக்கரில் ரூ.9.40 கோடியில் நிரந்தரப் பந்தல்அமைக்கும் திட்டம், ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் ரூ.3.67 கோடியில் 200 பண்ணை குட்டை கள் அமைக்கப்பட உள்ளன.
தஞ்சையில் மருதம் பூங்கா: அதேபோல ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, தூத்துக்குடி மாவட்டங்களில் மிளகாய் உற்பத்தியை அதிகரிக்க 1,230 ஏக்கரில் சீமைக் கருவேல மரங்கள் அகற்றப்பட்டு மிளகாய் சாகுபடி செய்யப்படும். 1,680 ஏக்கரில் மூலிகை பயிர்களை சாகுபடி செய்வதற்காக ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
இதுதவிர தலா ரூ.2 கோடி மதிப்பீட்டில் கன்னியாகுமரியில் முல்லைப் பூங்கா, தஞ்சாவூரில் மருதம் பூங்கா, கன்னியாகுமரியில் சூரியத் தோட்டம் மற்றும் தலா ரூ.1 கோடி மதிப்பீட்டில் செங்கல்பட்டில் செம்பருத்தி நடவுச்செடிகள் உற்பத்தி மையமும், தென்காசி நடுவக்குறிச்சியில் புதிய அரசுத் தோட்டக்கலை பண்ணையும் அமைக்கப்பட உள்ளன.
சிறு, குறு விவசாயிகளுக்காக பவர் டில்லர்களின் மானியம் ரூ.85 ஆயிரத்தில் இருந்து ரூ.1.20 லட்சமாக உயர்த்தப்படுவதுடன், பவர்டில்லர்கள் 4 ஆயிரம் விவசாயி களுக்கும், பவர் வீடர்கள் 4,000 விவசாயிகளுக்கும் வழங்கப்படும்.
மேலும் வேளாண் இயந்திரமயமாக்கல் திட்டத்தில் 26,179 விவசாயிகள் பயனடையும் வகையில் ரூ.170 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். ரூ.32.90 கோடியில் 207 வேளாண் இயந்திர வாடகை மையங்கள் அமைக்கப்படும். தனியார் வேளாண் இயந்திரங்கள் வாடகை சேவைக்கான செல்போன் செயலியும் ரூ.50 லட்சத்தில் உருவாக்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT