Published : 21 Feb 2024 05:53 AM
Last Updated : 21 Feb 2024 05:53 AM
மதுரை: திண்டுக்கல் அரசு மருத்துவர் சுரேஷ்பாபுவை சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து விடுவிப்பதாகக் கூறி, ரூ.20 லட்சம் லஞ்சம் பெற்ற வழக்கில் மதுரை அமலாக்கத் துறை அதிகாரி அங்கித் திவாரி லஞ்ச ஒழிப்பு போலீஸாரால் கைதுசெய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் ஜாமீன் கோரி தாக்கலான ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
இந்நிலையில், அங்கித் திவாரிமீது தனியாக வழக்கு பதிவு செய்தஅமலாக்கத் துறை, அவரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரியது. இதற்காக திண்டுக்கல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடியானது.
இதையடுத்து, விசாரணை நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்து, அங்கித் திவாரியை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி உயர் நீதிமன்றக் கிளையில் அமலாக்கத் துறை மனு தாக்கல் செய்தது.
இந்த மனு விசாரணைக்கு உகந்ததா, இல்லையா என்பதுதொடர்பான விசாரணை, நீதிபதிகள் ஜெயச்சந்திரன், குமரப்பன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அரசு வழக்கறிஞர் வாதிடும்போது, “வழக்கை ரத்து செய்யக் கோரிஅங்கித் திவாரி தொடர்ந்த வழக்கில், உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு தடை விதித்துள்ளது. உச்ச நீதிமன்ற உத்தரவைப் பொருத்து, இந்த மனு மீது முடிவு எடுக்கலாம்” என்றார்.
அங்கித் திவாரியை விசாரிக்கவேண்டியுள்ளது என்றும், அமலாக்கத் துறை அதிகாரிகள் சிறைக்குச் சென்று அவரது வாக்குமூலத்தை வீடியோவில் பதிவு செய்ய அனுமதி கோருகின்றனர் என்றும் அமலாக்கத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
பின்னர் நீதிபதிகள், “அங்கித் திவாரி வழக்கை ரத்து செய்யக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது. அந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவைப் பொருத்து, இந்த மனுவை விசாரணைக்குப் பட்டியலிடலாம்” என்று உத்தரவிட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT