Published : 21 Feb 2024 06:18 AM
Last Updated : 21 Feb 2024 06:18 AM
சென்னை: தமிழக உயர்கல்வித் துறை மற்றும் பிரிட்டிஷ் தூதரகம் சார்பில் இளம் தொழில் முறை (Young Professionals Scheme-YPS) திட்டம்தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின்கீழ் 18 வயது முதல் 30வயது வரை உள்ள 3,000 இளைஞர்களிடம் விசா விண்ணப்பம் பெறும் நிகழ்ச்சி சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு உயர்கல்வித் துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜ கண்ணப்பன் தலைமை தாங்கினார். இதில் பிரிட்டிஷ் துணைத் தூதர் அலெக்ஸ் எல்லிஸ், வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் குடியேற்ற கொள்கை மற்றும் நலன் இயக்குநர் நிதேஷ் குமார், அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் ஆர்.வேல்ராஜ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
விழாவில் அமைச்சர் ராஜகண்ணப்பன் பேசியதாவது: முதல்வர் மு.க.ஸ்டாலின் கல்வியை மேம்படுத்துவதற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளார். நான் முதல்வன் திட்டத்தின்கீழ் 28 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
புதுமை பெண் திட்டத்தின் மூலம்அரசுப் பள்ளியில் படித்து உயர்கல்வி பயிலும் 3 லட்சம் மாணவிகளுக்கு உதவித் தொகையாக ரூ.1,000 மாதந்தோறும் வழங்கப்படுகிறது. தொடர்ந்து அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்த மாணவிகளுக்கும் புதுமைப் பெண் திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது.
இதுதவிர அரசுப் பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவர்களுக்கும் தமிழ் புதல்வன் திட்டத்தின்கீழ் மாதம் ரூ.1,000 வழங்கப்படும் என்றுஅறிவிக்கப்பட்டுள்ளது.உயர்கல்வியில் தொழில்முறை படிப்புகளில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடுதிட்டமும் அமலில் உள்ளது. இத்தகைய திட்டங்களின் மூலம் இந்தியாவிலேயே தமிழகம் ஒரு முன்மாதிரி மாநிலமாக திகழ்கிறது.
பிரிட்டிஷ் தூதரகத்துடன் இணைந்து தொடங்கப்பட்டுள்ள இளம் தொழில் முறை திட்டத்தின் மூலம் இந்திய இளைஞர்கள் 2 ஆண்டுகளுக்கு பிரிட்டனுக்கு சென்று வேலைவாய்ப்பு பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT