Published : 21 Feb 2024 06:21 AM
Last Updated : 21 Feb 2024 06:21 AM
சென்னை: தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விடமேம்பாட்டு வாரிய தலைமைஅலுவலகத்தில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (டிஎன்பிஎஸ்சி) வாயிலாக தேர்தெடுக்கப்பட்ட 63 உதவி பொறியாளர்கள், 2 இளநிலை உதவியாளர்கள் மற்றும் 3 பண வசூலாளர்களுக்கு பணியிட ஆணைகளை அமைச்சர் தா.மோ.அன்பரசன் வழங்கினார்.
அப்போது பேசிய அமைச்சர், “அனைத்து அரசு காலிப் பணியிடங்களும் டிஎன்பிஎஸ்சி மூலம் நிரப்பப்படும் என்றுதமிழக முதல்வர் அறிவித்திருந்தார். அதன்படி பல்வேறு துறைகளுக்கு தேர்வு செய்யப்பட்ட 1,598 பேருக்கு நியமனஆணைகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.
இதைத் தொடர்ந்து, தற்போது தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்துக்கு முதன்முதலாக டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வு செய்யப்பட்ட 63 உதவிப் பொறியாளர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது.
ஏழை, எளிய மக்களுக்காக அடுக்கு மாடிக் குடியிருப்புகள் கட்டும் பணிகளை எவ்வித தொய்வுமின்றி மேற்கொள்வதற்காக புதிதாக நியமிக்கப்பட்ட உதவிப் பொறியாளர்கள் தங்கள் கடமை உணர்ந்து பணியாற்ற வேண்டும்.
மேலும், டிஎன்பிஎஸ்சி மூலம்வாரியத்துக்கு 64 இளநிலைஉதவியாளர், 68 பண வசூலாளர்கள், 7 சுருக்கெழுத்து தட்டச்சர், 11 சமுதாய அலுவலர் மற்றும் 63 உதவிப் பொறியாளர்கள் என 213 பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளது” என்றார்.
நிகழ்ச்சியில் வீட்டுவசதித் துறை செயலர் சி.சமயமூர்த்தி, வாரிய மேலாண்மை இயக்குநர் சு.பிரபாகர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT