Published : 28 Aug 2014 11:25 AM
Last Updated : 28 Aug 2014 11:25 AM

கணித விடைத்தாளில் 4 பக்கங்கள் மாயம்: புதுகை மாணவருக்கு கிடைத்தது 40 மதிப்பெண்

பிளஸ் டூ கணிதத் தேர்வின் விடைத்தாளில் 4 பக்கங்கள் மாயமானதற்கு 40 மதிப்பெண் வழங்கப்பட்டது. புதிய மதிப்பெண் அடிப்படையில் மாணவருக்கு பொறியியல் கல்லூரியில் இடம் வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

புதுக்கோட்டை மாவட்டம் ராஜகோபாலபுரத்தைச் சேர்ந்த பொன்னுசாமி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு விவரம்: என் மகன் பிரகாஷ், பிளஸ் டூ தேர்வில் 1080 மதிப்பெண் பெற்றார். கணிதத் தேர்வை சிறப்பாக எழுதியும், 153 மதிப்பெண் மட்டுமே பெற்றார். கணித விடைத்தாள் நகல் கேட்டு விண்ணப்பித்தேன்.அதில், 4 பக்கங்கள் இல்லை. அந்த பக்கங்களில் 40 ஒரு மதிப்பெண் கேள்விகளுக்கான விடைகள் எழுதப்பட்டிருந்தன. அவற்றுக்கு மதிப்பெண் வழங்கவில்லை. மதிப்பெண் வழங்கவும், அதனடிப்படையில் பொறியியல் கல்லூரியில் சேர்க்கவும் உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது 38 மதிப்பெண் கூடுதலாக வழங்குவதாக தேர்வுத் துறை தெரிவித்தது. ஆனால், 40 மதிப்பெண் வழங்குமாறு மனுதாரரின் வழக்கறிஞர் வலியுறுத்தினார்.

இவ்வழக்கு நீதிபதி கே.கே.சசிதரன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, 40 மதிப்பெண் வழங்குவதாக தேர்வுத்துறை தெரிவித்தது. இதையேற்ற நீதிபதி, புதிய மதிப்பெண் அடிப்படையில் மாணவருக்கு பொறியியல் கல்லூரியில் ஒரு வாரத்தில் இடம் வழங்க தமிழ்நாடு பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கை செயலர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x