Published : 06 Feb 2018 09:18 AM
Last Updated : 06 Feb 2018 09:18 AM

திருமங்கைச்சேரி கோயிலின் வெள்ளிப் பொருட்கள் மாயமான வழக்கு: பந்தநல்லூர் கோயில் எழுத்தர் வீட்டில் நடராஜர் உலோக சிலை பறிமுதல்

கும்பகோணத்தை அடுத்த திருமங்கைச்சேரி வரதராஜ பெருமாள் கோயிலின் வெள்ளிப் பொருட்கள் மாயமான வழக்கு தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தியபோது, பந்தநல்லூர் கோயில் தலைமை எழுத்தரின் வீட்டில் இருந்து நடராஜர் உலோகச் சிலை ஒன்றைக் கைப்பற்றினர்.

தஞ்சாவூர் மாவட்டம் பந்தநல்லூர் பசுபதீஸ்வரர் கோயிலின் சிலைகள் மாயமான வழக்கில், கடந்த அக்டோபர் மாதம் அக்கோயிலின் தலைமை எழுத்தர் கி.ராஜாவை சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், பசுபதீஸ்வரர் கோயில் சிலைகள் பாதுகாப்பு மையத்தில் வைப்பதற்காக, ஏற்கெனவே ஒப்படைத்த திருமங்கைச்சேரி வரதராஜ பெருமாள் கோயிலின் 53 வெள்ளிப் பொருட்கள் தொடர்பாக உபயதாரர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இந்த ஆபரணங்களை சரிபார்க்க வேண்டும் என சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாரிடம் புகார் அளித்தனர்.

அதன்படி, சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி பொன்.மாணிக்கவேல், டிஎஸ்பி ரமேஷ், இன்ஸ்பெக்டர் கோசலராமன் ஆகியோர் வரதராஜ பெருமாள், பசுபதீஸ்வரர் கோயில்களில் கடந்த ஜனவரி மாதம் ஆய்வு செய்தனர்.

இதில், 53 வெள்ளிப் பொருட்களில் பாடகம், கண்டசரம், கொலுசு, வைரமுடி, கவசம், கிரீடம், ஒட்டியாணம், தோடு, பொட்டு உட்பட 37 வெள்ளிப் பொருட்கள் காணாமல் போனது தெரியவந்தது. அங்கு, 16 பொருட்கள் மட்டுமே இருந்தன. இதுதொடர்பாக, கடந்த ஜன.25-ம் தேதி ராஜா மீது மேலும் ஒரு வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

ஏற்கெனவே பந்தநல்லூர் கோயில் சிலை மாயமான வழக்கு தொடர்பாக ராஜாவிடம் விசாரணை நடத்த சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் கும்பகோணம் நீதிமன்றத்தில் அனுமதி பெற்றுள்ள நிலையில், ஐஜி பொன்.மாணிக்கவேல் கடந்த 3-ம் தேதி இரவு தொடங்கி நேற்று முன்தினம் (பிப்.4) அதிகாலை வரை விசாரணை நடத்தினார்.

விசாரணையின்போது, பந்தநல்லூரில் உள்ள ராஜாவின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில், பித்தளையால் ஆன ஒரு அடி உயரமுள்ள நடராஜர் சிலையை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

இச்சிலையை நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ள போலீஸார், இதுகுறித்து ராஜாவிடம் விசாரணை செய்தனர். பின்னர், நேற்று அவரை திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x