Published : 20 Feb 2024 06:06 AM
Last Updated : 20 Feb 2024 06:06 AM
சென்னை: சென்னை தீவுத்திடலைச் சுற்றியுள்ள சாலை மார்க்கமாக கடந்தாண்டு டிச.9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் தனியார் நிறுவனத்துடன் இணைந்து தெற்காசியா வில் முதன்முறையாக இரவு நேர பார்முலா-4 கார் பந்தயம் நடத்தத் தமிழக அரசு சார்பில் திட்டமிடப்பட்டது.
சென்னை மாநகருக்குள் எந்த பகுதியிலும் இந்த பந்தயத்தை நடத்தக் கூடாது என தடை விதிக்கக் கோரியும், இந்தப் பந்தயத்தை ஸ்ரீபெரும்புதூர் பகுதிக்கு மாற்றக் கோரியும் மருத்துவர் ஸ்ரீஹரிஷ் மற்றும் லூயிஸ் ராஜ், டிஎன்பிஎஸ்சி முன்னாள் உறுப்பினரான பாலுசாமி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகளைத் தொடர்ந்தனர்.
இந்த வழக்குகள் ஏற்கெனவே உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, மிக்ஜாம் புயல் காரணமாக தள்ளிவைக்கப்பட்ட கார் பந்தயத்தை வரும் ஜூன் மாதத்துக்குப் பிறகு நடத்த திட்டமிட்டுள்ளதாகத் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கு விசாரணை நீதிபதிகள் ஆர்.மகாதேவன், முகமது ஷபீக் அமர்வில் ஏற்கெனவே நடந்தது.
அப்போது மனுதாரர்கள் தரப்பில் இந்த கார் பந்தயம் நடத்த தமிழக அரசு ரூ.42 கோடியை அளித்திருப்பது தவறு என்றும், சட்டரீதியாக எந்தவொரு முன் அனுமதியும் பெறாமல் இந்த கார் பந்தயம் நடத்தப்படுவதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.
ஆனால், தமிழக அரசின் சார்பில் தெற்காசியாவில் முதன்முறையாக சென்னையில் இரவு நேர கார் பந்தயம் நடத்த தமிழக அரசு கொள்கை ரீதியாக முடிவு எடுத்துள்ளது எனத் தெரிவிக்கப் பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் இந்த வழக்கின் தீர்ப்பைத் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்திருந்தனர்.
இந்நிலையில் நீதிபதிகள் நேற்று பிறப்பித்துள்ள தீர்ப்பில், சர்வதேச அளவிலான கார் பந்தயம் போன்ற விளையாட்டுகளை தமிழகத்தில் ஊக்குவிக்கும் நோக்கில் இந்த கார் பந்தயத்தை நடத்தத் தமிழக அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளதாகத் தெரி விக்கப்பட்டுள்ளது.
எனவே சென்னை தீவுத்திடலைச் சுற்றிலும் உள்ள பகுதிகளில் பார்முலா-4 கார் பந்தயத்தை நிபந்தனைகளுடன் நடத்திக்கொள்ள எந்த தடையும் கிடையாது. கார் பந்தயம் அப்பகுதிகளில் நடைபெறும் போது ஒலி மாசுவை வெகுவாக குறைப்பதற்கான நடவடிக்கைகளை தனியார் நிறுவனமும், அரசும் எடுக்க வேண்டும்.
இந்த கார் பந்தயத்தை பொதுமக்களுக்கு தொந்தரவு இல்லாத வகையில் நடத்தத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை களை மேற்கொள்ள வேண்டும். இந்த கார் பந்தயத்துக்காக தமிழக அரசு செலவிட்டுள்ள ரூ.42 கோடியை சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனம் அரசுக்கு திருப்பிச் செலுத்த வேண்டும்.
இந்த பந்தயத்துக்கான முழு செலவையும் தனியார் நிறுவனமே ஏற்றுக்கொள்ள வேண்டும். அதேபோல எதிர்வரும் அடுத்த 2 ஆண்டுகளில் இந்த பந்தயத்தை நடத்திக்கொள்ள ரூ.15 கோடியை சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனம் அரசுக்கு டெபாசிட் செய்ய வேண்டும், என உத்தரவிட்டுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT