Published : 20 Feb 2024 06:30 AM
Last Updated : 20 Feb 2024 06:30 AM

3 லட்சம் மாணவர்களுக்கு மாதம் ரூ.1,000: தமிழக பட்ஜெட்டில் ‘தமிழ் புதல்வன்’ திட்டம் அறிவிப்பு

சட்டப்பேரவையில் நேற்று பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்பு, முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு.

சென்னை: அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை படித்து, உயர் கல்வியில் சேரும் 3 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் ‘தமிழ்ப் புதல்வன்’ என்ற மாபெரும் திட்டம் வரும் நிதி ஆண்டில் அறிமுகம் செய்யப்படும் என்று தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த 12-ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. இந்த நிலையில், தமிழக அரசின் 2024-25 நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை சட்டப்பேரவையில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று தாக்கல் செய்தார். முன்னதாக, முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற அவர், பட்ஜெட் அடங்கிய கையடக்க கணினியுடன் பேரவைக்கு வந்தார். பேரவை தலைவரின் அறிவிப்பை தொடர்ந்து, காலை 10 மணிக்கு பட்ஜெட் உரையை வாசிக்க தொடங்கி, பகல் 12.07 மணிக்கு நிறைவு செய்தார். நிதித்துறை பொறுப்பை ஏற்ற பிறகு, அவர் முதல்முறையாக தாக்கல் செய்த பட்ஜெட் இது.

பட்ஜெட் உரையில், பல்வேறு புதிய திட்டங்கள், நிதி ஒதுக்கம் தொடர்பான அறிவிப்புகளை வெளியிட்டு அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியதாவது:

முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான இந்த அரசுக்கு 7 முதன்மையான நோக்கங்களை கொண்ட ஒரு மாபெரும் தமிழ்க் கனவு உண்டு. சமூக நீதி, கடைக்கோடி தமிழர் நலன், உலகை வெல்லும் இளைய தமிழகம், அறிவுசார் பொருளாதாரம், மகளிர் நலன் காக்கும் சமத்துவப் பாதை, பசுமைவழி பயணம், தாய்த் தமிழும் தமிழர் பண்பாடும் என்ற 7 இலக்குகளை முன்வைத்தே இந்த பட்ஜெட் அமைந்துள்ளது.

இந்த ஆண்டில் 1 லட்சம் வீடுகள்: குறிப்பாக, குடிசை இல்லாத தமிழகம் என்ற இலக்கை அடையும் வகையில் 2030-ம் ஆண்டுக்குள் கிராமப்புற பகுதிகளில் 8 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும். இதில் முதல் கட்டமாக, வரும் நிதி ஆண்டில் தலா ரூ.3.50 லட்சம் செலவில் ஒரு லட்சம் புதிய வீடுகள் உருவாக்கப்படும். ‘கலைஞரின் கனவு இல்லம்’ என்று பெயரிடப்பட்ட இத்திட்டத்துக்கு ரூ.3,500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

தலைசிறந்த அறிவியல் நிறுவனங்களின் வழிகாட்டுதலில், மக்கள் பங்களிப்புடன் 5 ஆயிரம் நீர்நிலைகளை சீரமைக்கும் திட்டம் ரூ.500 கோடியில் செயல்படுத்தப்படும்.
தமிழகத்தில் வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழும் 2.2 சதவீதம் பேரில் மிகவும் வறிய நிலையில் உள்ள 5 லட்சம் ஏழை குடும்பத்துக்கு அரசின் உதவிகள் அனைத்தையும் ஒருங்கிணைத்து வழங்கி, அவர்களை வறுமையில் இருந்து மீட்டெடுக்கும் வகையில், ‘முதல்வரின் தாயுமானவர் திட்டம்’ என்ற புதிய திட்டம் செயல்படுத்தப்படும்.

1.15 கோடி குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்துக்கு ரூ.13,720 கோடி ஒதுக்கப்படும். நீலகிரி, கொடைக்கானல், வால்பாறை போன்ற பகுதிகளுக்கும் பெண்கள் இலவச பேருந்து பயண திட்டம் விரிவுபடுத்தப்படும்.

மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் புதுமைப்பெண் திட்டம், வரும் கல்வி ஆண்டு முதல், அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் பயிலும் மாணவிகளும் பயன் பெறும் வகையில் விரிவுபடுத்தப்பட்டு, ரூ.370 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கிராமப்பகுதிகளில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மேலும் 2.50 லட்சம் மாணவர்கள் பயன்பெறும் வகையில் முதல்வரின் காலை உணவு திட்டம் விரிவுபடுத்தப்படும்.

உயர்கல்வியை தொடர விரும்பும் மூன்றாம் பாலினத்தவரின் கல்வி, விடுதி கட்டணம் உள்ளிட்ட அனைத்து கல்வி செலவுகளையும் அரசே ஏற்கும்.

புதுமைப்பெண் திட்டம்போல, அரசுப் பள்ளிகளில் பயின்ற ஏழை மாணவர்களை சாதனையாளர்களாக மாற்றவும், உயர்கல்வி சேர்க்கையை உயர்த்தவும் ‘தமிழ்ப் புதல்வன்’ என்ற மாபெரும் திட்டம் வரும் நிதி ஆண்டில் அறிமுகம் செய்யப்படும். அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை படித்து, உயர்கல்வியில் சேரும் 3 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு மாதம் ரூ.1,000 அவர்களது வங்கிக் கணக்கில் சேர்க்கப்படும். இத்திட்டத்துக்கு ரூ.360 கோடி ஒதுக்கப்படும்.

ரூ.2,500 கோடி கல்விக் கடன்: தேவை அடிப்படையில் ஒரு லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு பல்வேறு வங்கிகள் மூலம் ரூ.2,500 கோடி கல்விக் கடன் வழங்கப்படும்.

முதல்வர் தலைமையில் தமிழ்நாடு செயற்கை நுண்ணறிவு இயக்கம் ஏற்படுத்தப்படும். புதிதாக 3,000 பேருந்துகள், 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் செய்யப்படும். தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைப்பதற்கான சட்ட மசோதா, நடப்பு கூட்டத்தொடரில் அறிமுகம் செய்யப்படும். நகரங்களை ஒட்டிய கிராமப்புறங்களில் சிற்றுந்து சேவை நீட்டிக்கப்படும்.

தமிழகத்தில் 11,500 மெகாவாட் திறனுள்ள நீரேற்று புனல்மின் நிலையங்கள் அமைக்க உகந்த 12 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. பொது, தனியார் பங்களிப்புடன் ரூ.60 ஆயிரம் கோடி முதலீட்டில் இவை உருவாக்கப்படும்.

மாநில வளர்ச்சியை பாதிக்காமல் நிதி பற்றாக்குறையை கட்டுப்படுத்தும் சீரிய நிதி நிர்வாக மேலாண்மையை இந்த அரசு கடைபிடித்து, 2022-23-ம் ஆண்டில் 3.46 சதவீதமாக இருந்த நிதி பற்றாக்குறையை 2023-24-ல் 3.45 சதவீத மாகவும், 2024-25-ல் 3.44 சதவீதமாகவும் குறைத்துள்ளது.

மாநிலத்தின் வருவாய் ஆதாரங்களில் இருந்தே தமிழ்நாடு மின் உற்பத்தி, பகிர்மான கழகத்துக்கு இழப்பீட்டு நிதி வழங்கிய பிறகும், பேரிடர்களால் கடும் பாதிப்பை சந்தித்தபோதும், நிதி பற்றாக் குறையை குறைத்து அரசு சாதனை படைத்துள்ளது. பல்வேறு சவால்களுக்கு இடையிலும் திறன்மிகு நிதி மேலாண்மையை உறுதியாக கடைபிடித்து, அதேநேரம், மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற இந்த அரசு உறுதி கொண்டிருப்பதை ‘தடைகளை தாண்டி வளர்ச்சி நோக்கி’ பயணிக்கும் பட்ஜெட் கோடிட்டு காட்டுகிறது. இவ்வாறு பட்ஜெட் உரையில் அமைச்சர் தெரிவித்தார்.

பட்ஜெட் முக்கிய அம்சங்கள்

  • ரூ.500 கோடியில் 5,000 நீர்நிலைகள் சீரமைப்பு
  • வறுமை ஒழிப்புக்கு ‘முதல்வரின் தாயுமானவர்’ திட்டம்
  • மகளிர் உரிமை திட்டத்துக்கு ரூ.13,720 கோடி
  • அரசு உதவி பள்ளிக்கும் காலை உணவு திட்டம்
  • கல்லூரி மாணவருக்கு ரூ.2,500 கோடி கல்விக் கடன்
  • கிராமப்புறங்களில் சிற்றுந்து சேவை
  • நிதி பற்றாக்குறையை குறைத்து சாதனை

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x