மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறாரா டி.ஆர்.பாலு?

மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறாரா டி.ஆர்.பாலு?
Updated on
1 min read

ஸ்ரீபெரும்புதூர் தொகுதி எம்.பி.யாக உள்ள டி.ஆர்.பாலுவுக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்க இருப்பதாக தகவல் பரவி வருகிறது. இந்த தொகுதியை காங்கிரஸ் கட்சியும் கேட்பதால் தலைமை என்ன முடிவெடுக்குமோ என திமுகவினர் குழப்பமடைந்துள்ளனர். ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதியில் கடந்த தேர்தலில் திமுக சார்பில் டி.ஆர்.பாலு போட்டியிட்டு வெற்றிபெற்று ௭ம்.பி. ஆனார்.

திமுக பொருளாளராகவும் அக்கட்சியின் மக்களவைக் குழு தலைவராகவும் உள்ளார். கட்சியின் மூத்த நிர்வாகியான டி.ஆர்.பாலுவுக்கு 86 வயதாகிறது. எனவே, அவருக்கு ஓய்வு அளிக்க திமுக தலைமை திட்டமிட்டுள்ளதாகத் தொண்டர்கள் மத்தியில் பேசப்படுகிறது.

இதனால், அவருக்கு ஸ்ரீபெரும்புதூர் தொகுதி வழங்கப்படாது என்றும், அவரை மாநிலங்களவை உறுப்பினராக்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து திமுக நிர்வாகிகள் சிலர் கூறியதாவது: இளைஞரணி செயலாளர் உதயநிதி, கட்சியில் இளைஞர்களின் பங்கு அதிகமாக இருக்க வேண்டும் என்பதில் தீவிரம் காட்டி வருகிறார் இதன் தொடர்ச்சியாக, இந்த முறை ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் டி.ஆர்.பாலுவுக்கு சீட் தருவதைவிட, அவருக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்கலாம் என முடிவெடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது.அதேநேரம், கட்சியில் சீனியர்கள் அனைவரும் டி.ஆர்.பாலுவுக்கு ஆதரவாக உள்ளனர்.

இண்டியா கூட்டணி வெற்றிபெறும் பட்சத்தில் கூட்டணி அமைச்சரவையில் டி.ஆர்.பாலுவுக்கு அமைச்சர் பதவி உறுதி என்றும் அவர்கள் பேசி வருகின்றனர். ஆனால் திமுக நிர்வாகிகள் மத்தியில், புதியவர்களுக்கு இம்முறை பெரும்புதூரில் வாய்ப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையே உள்ளது.

இந்த சூழலில், காங்கிரஸ் கட்சியும் திமுகவிடம் அளித்த தொகுதிப் பட்டியலில் பெரும்புதூர் தொகுதியும் இருப்பதாகவும், தற்போது புதிதாகத் தலைவராகியுள்ள செல்வப்பெருந்தகை தனது வாரிசை எம்.பி.யாகநிறுத்த காய் நகர்த்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த தொகுதியில் டி.ஆர்.பாலு மீது மக்கள் மத்தியில் அதிருப்தி உள்ளதா என திமுக தலைமை ரகசியமாக தனியார் நிறுவனம் மூலம் சர்வேயும் நடத்தியுள்ளது. அந்த சர்வேயின்படியும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் இருக்கும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in