“இரண்டு நாட்களில் நல்ல செய்தி” - தேர்தல் கூட்டணி குறித்து கமல்ஹாசன் தகவல்

“இரண்டு நாட்களில் நல்ல செய்தி” - தேர்தல் கூட்டணி குறித்து கமல்ஹாசன் தகவல்
Updated on
1 min read

சென்னை: கூட்டணி குறித்து இன்னும் இரண்டு நாட்களில் நல்ல செய்தியுடன் சந்திக்கிறேன் என்று நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் 7-ம் ஆண்டு தொடக்க நாளான பிப்.21-ம் தேதி கட்சித் தலைவர் கமல்ஹாசன் கொடியேற்றி வைத்து உரையாற்றவுள்ளார். இதற்கான அக்கட்சியின் அறிக்கையில், "தாய்மொழி தினத்தில் (பிப்.21) பிறந்த மக்கள் நீதி மய்யம் கட்சி மக்களவைத் தேர்தல் களத்தில் வெல்லும். வரலாறு அதைச் சொல்லும். நாடாளுமன்றத்தில் நம்மவர்" என்று கூறப்பட்டிருந்தது.

வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் கூட்டணி அமைத்து மக்கள் நீதி மய்யம் போட்டியிடவுள்ளது எனச் சொல்லப்படும் நிலையில், கமல் காங்கிரஸ் கூட்டணியில் இடம்பெறுவார் என்றும், தமிழக காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்படும் இடங்களில் கமல் போட்டியிட வாய்ப்புள்ளது என்றும் சில நாட்களாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. காங்கிரஸ் மற்றும் அதன் தலைவர் ராகுல் காந்தியுடன் சமீப காலத்தில் கமல் காட்டிய நெருக்கம் அதற்கு காரணமாக சொல்லப்படுகிறது.

இதனிடையே, அமெரிக்காவில் இருந்து திரும்பிய கமல் சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அதில், "தக் லைப் படத்தின் முன்னேற்பாடுகளுக்காக அமெரிக்கா சென்றிருந்தேன். அதை முடித்துவிட்டு தமிழகம் திரும்பியுள்ளேன். இன்னும் இரண்டு நாட்களில் நல்ல செய்தியுடன் சந்திக்கிறேன். நாடாளுமன்றத் தேர்தல் பணிகள் நன்றாக சென்றுகொண்டிருக்கிறது. கூட்டணி குறித்த தகவல்களை இரண்டு நாட்களில் சொல்கிறேன்." இவ்வாறு தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in