

சென்னை: தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் திமுக - காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் வெற்றிபெறும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்ட செல்வப்பெருந்தகை நேற்று தெரிவித்தார்.
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருந்த கே.எஸ்.அழகிரி மாற்றப்பட்டு, அப்பதவிக்கு கு.செல்வப்பெருந்தகை எம்எல்ஏவை நேற்று முன்தினம் அகில இந்திய காங்கிரஸ் தலைமை நியமித்தது.
இந்நிலையில், செல்வப்பெருந்தகை நேற்று கிண்டி காந்தி மண்டபத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, சின்னமலையில் உள்ள முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி சிலை, தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தில் உள்ள காமராஜர் சிலை, அண்ணா சாலையில் உள்ள தந்தை பெரியார் சிலை, வால்டாக்ஸ் சாலையில் உள்ள முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி சிலை, அண்ணாமலைபுரத்தில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சிலை ஆகியவற்றுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: முதல்வர் தலைமையில் தமிழகத்தில் மக்களவைத் தேர்தலில் கூட்டணி கட்சிகள் வெற்றிக்கு வியூகங்கள் வகுத்து வருகிறோம். இத்தேர்தலில் 39 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம். கடந்த தேர்தலைவிட இந்தமுறை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் எங்கள் வேட்பாளர்கள் வெற்றிபெற நடவடிக்கை எடுத்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து, காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன், எம்.கிருஷ்ணசாமி ஆகியோரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்று, கட்சியை வலுப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தினார். தேசத் தலைவர்களுக்கு மரியாதை செலுத்தியபோது, மூத்த தலைவர் கே.வி.தங்கபாலு, ரூபி மனோகர் எம்எல்ஏ, மாவட்ட தலைவர்கள் சிவ.ராஜசேகரன், முத்தழகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.