

சென்னை: ஊரக வளர்ச்சி, பள்ளிக்கல்வித் துறைகள் சார்பில் ரூ.337.90 கோடியில், வகுப்பறை, பள்ளி, நூலகம் மற்றும் துறை கட்டிடங்களை திறந்த வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின், ரூ. 139.65 கோடியில் புதிய சாலை அமைக்க அடிக்கல் நாட்டினார்.
இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: சட்டப்பேரவையில் 110-வது விதியின்கீழ் ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு ரூ.800 கோடி மதிப்பில் 6 ஆயிரம் புதிய வகுப்பறைகள், உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ரூ. 250 கோடியில் 1,200 வகுப்பறைகள் என ரூ.1050 கோடியில் 7200 வகுப்பறைகள் கூடுதலாக கட்டப்படும் என முதல்வர் அறிவித்திருந்தார்.
அதன் அடிப்படையில் 2022-23 ம் ஆண்டில் ரூ.800 கோடி மதிப்பீட்டில் 5,653 புதிய வகுப்பறைகள் கட்ட அரசாணை வெளியிடப்பட்டது. இக்கட்டிடங்கள் அனைத்தும் உயர்த்தப்பட்ட மேற்கூரை, விசாலமான தாழ்வாரம், காற்றோட்டமிக்க ஜன்னல் வசதிகள், வழுக்காத தரைகள், கற்றலை ஊக்குவிக்கும் சுவர் ஓவியங்கள், வாழ்க்கைப் பாடங்கள் அடங்கியவையாகும்.
இத்திட்டத்தின் கீழ், முதற்கட்டமாக தமிழகத்தின் 37 மாவட்டங்களில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் கட்டி முடிக்கப்பட்ட ஆயிரம் வகுப்பறைகள் கடந்தாண்டு செப்.26-ம் தேதியும் 2-ம் கட்டமாக 34 மாவட்டங்களில் ரூ.155.42 கோடியில் 1,000 வகுப்பறைகள் டிச.26-ம் தேதியும் முதல்வரால் திறக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, ரூ.204.57 கோடியில் 35 மாவட்டங்களில் 1,374 தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் கட்டி முடிக்கப்பட்ட வகுப்பறை கட்டிடங்களை நேற்று முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
மேலும், ஊரக வளர்ச்சித்துறை சார்பில் திருநெல்வேலி, திண்டுக்கல், மதுரை, நாமக்கல், பெரம்பலூர், சேலம், வேலூர் மாவட்டங்களில் ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டிடங்கள், 62 கிராம செயலகம், கிராம ஊராட்சி அலுவலகங்கள், 150 அங்கன்வாடி மையங்கள், 50 பொது விநியோக கடைகள், உணவு தானிய கிடங்குகள் என ரூ.80.85 கோடி மதிப்பிலான கட்டிடங்களை திறந்து வைத்தார்.
நாமக்கல் மாவட்டம், கீழூர் ஊராட்சியில் நபார்டு திட்டத்தின் கீழ் கீழூர், மேலூர், கெடமலையை இணைக்கும் வகையில் ரூ.139.65 கோடியில் 31 கிலோ மீட்டர் நீளத்தில் போதமலையில் சாலை அமைக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
பள்ளிக்கல்வித் துறை சார்பில் செங்கல்பட்டு, கடலூர், நாகப்பட்டினம், நீலகிரி, பெரம்பலூர், சேலம், தேனி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் உள்ள அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ரூ. 48.57 கோடியில் 227 வகுப்பறைகட்டிடங்கள், 19 ஆய்வகங்கள், 7 கழிப்பறைகள், 3 பள்ளி சுற்றுச்சுவர்கள், ஒரு நூலகம், ஒரு கலையரங்கம் மற்றும் ஒரு முகப்பு வளைவு ஆகியவற்றையும் முதல்வர் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில், துறை செயலர்கள் ப.செந்தில்குமார், ஜெ.குமரகுருபரன், ஊரக வளர்ச்சி இயக்குநர் பா.பொன்னையா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.