Published : 19 Feb 2024 05:21 AM
Last Updated : 19 Feb 2024 05:21 AM
நாமக்கல்: ஆந்திர மாநிலத்தில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், நாமக்கல் பகுதியில் உள்ள கோழிப் பண்ணைகளில் நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் கடந்த 7-ம் தேதி ஒரு கோழிப் பண்ணையில் 10 ஆயிரம் கோழிகள் திடீரென உயிரிழந்தன. ஆய்வில், உயிரிழந்த கோழிகளுக்கு பறவைக் காய்ச்சல் நோய் தாக்கம் இருந்தது உறுதி செய்யப்பட்டது.
இதுதொடர்பாக ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "நெல்லூர் மாவட்டத்தில் உள்ள சட்டகுட்ல, குமாளடிப்பா கிராமங்களில் பறவைக் காய்ச்சல் நோய்த் தாக்கம் உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே, இந்த கிராமங்களைச் சுற்றிலும் 10 கி.மீ. சுற்றளவுக்குக் கட்டுப்பாடு பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து கோழி, இறைச்சி மற்றும் முட்டை உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்யவோ, வேறு இடங்களுக்குக் கொண்டு செல்லவோ தடை விதிக்கப்பட்டுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஆந்திர மாநில எல்லையில் உள்ள திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி ஆகிய 5 மாவட்டங்களில் உள்ள பொதுமக்களுக்கும், கோழிப் பண்ணையாளர்களுக்கும் கால்நடை பராமரிப்புத் துறை மற்றும் பொது சுகாதாரத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதையடுத்து, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கோழிப் பண்ணையாளர்கள், தங்கள் பண்ணைகளில் பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளனர். நாமக்கல், சேலம், ஈரோடு உள்ளிட்ட பகுதியில் 1,000-க்கும் மேற்பட்ட முட்டை கோழிப் பண்ணைகளில், 5 கோடி கோழிகள் வளர்க்கப்படுகின்றன.
இவற்றைப் பாதுகாக்கக் கோழிகளுக்குக் கிருமிநாசினி தெளிக்கப்படுகிறது. பண்ணை வாயிலில் பொட்டாசியம் பெர்மாங்கனேட் கரைசல் கலந்த தண்ணீர் வைக்கப்பட்டு, வெளி ஆட்களும், வாகனங்களும் அதன் வழியாக வர அனுமதிக்கப்படுகின்றனர். இது தொடர்பாக பண்ணையாளர்கள் சிலர் கூறும்போது, “நாமக்கல் பகுதியில் நிலவும் தட்பவெப்ப நிலை மற்றும் பண்ணைகளில் பின்பற்றப்படும் பயோ செக்யூரிட்டி முறைகளால், பறவைக் காய்ச்சல் நோய்க் கிருமிகள் பரவ வாய்ப்பில்லை. எனினும், பண்ணைகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன” என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT