

சிவகாசி: சரவெடி மற்றும் பேரியம் நைட்ரேட் பயன்படுத்தி பட்டாசு உற்பத்தி செய்ய அனுமதி வழங்கக்கோரி இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தமிழன் பட்டாசு மற்றும் கேப் வெடி உற்பத்தியாளர்கள் சங்கம் (டாப்மா) அறிவித்துள்ளது.
சிவகாசி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 1,100-க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் இயங்குகின்றன. நாட்டின் மொத்த பட்டாசு உற்பத்தியில் 95சதவீதம் சிவகாசியில்தான் உற்பத்தி செய்யப்பட்டுகிறது.
இந்நிலையில், பட்டாசு வெடிப்பதால் ஒலி மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதால் பட்டாசு உற்பத்தி மற்றும் விற்பனைக்கு தடை விதிக்கக் கோரி 2018-ல் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கில், பேரியம் நைட்ரேட் பயன்படுத்தவும், சரவெடிதயாரிக்கவும் நீதிமன்றம் தடை விதித்தது.
உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி சுற்றுச்சூழலைப் பாதிக்காத வகையில் பசுமைப் பட்டாசு தயாரிப்பது குறித்து புதிய ஃபார்முலாவை உருவாக்கி, உற்பத்தியாளர்ளுக்குப் பயிற்சி அளிக்க மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம், தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் கழகம் (நீரி), மத்திய வெடிபொருள் கட்டுப்பாட்டு துறை (பெசோ) ஆகியவற்றுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
சிவகாசி பகுதிகளில் உள்ள பட்டாசு ஆலைகளில் பசுமை பட்டாசு மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது. பேரியம் நைட்ரேட் மற்றும் சரவெடி தடை காரணமாக 50 சதவீதம் வரை பட்டாசு உற்பத்தி பாதிக்கப்பட்டது.
இந்நிலையில், தமிழன் பட்டாசு மற்றும் கேப் வெடி உற்பத்தியாளர்கள் சங்கம் (டாப்மா) வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: சரவெடி தயாரிக்கவும், பேரியம் நைட்ரேட் பயன்படுத்தி பட்டாசு தயாரிக்கவும் அனுமதி வழங்கக் கோரி, மாவட்ட ஆட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர், பட்டாசு தனி தாசில்தார் ஆகியோரிடம் கோரிக்கை அளிக்கப்பட்டது. சரவெடி, பேரியம் நைட்ரேட் தடை காரணமாக பலதொழிற்சாலைகளை நடத்த முடியாத சூழல் நிலவுகிறது.
எனவே, இன்று (பிப்.19) முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவது என முடிவு எடுக்கப்பட்டது.
அதன்படி, பட்டாசு ஆலைகள் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுகின்றன. இவ்வாறு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.