

கவிஞர் வைரமுத்துவைக் கண்டித்து 2-வது நாளாக உண்ணாவிரதம் இருந்துவரும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் சடகோப ராமானுஜரை பாஜக தேசிய செயலர் எச்.ராஜா இன்று (வெள்ளிக்கிழமை) காலை சந்தித்தார். அப்போது உண்ணாவிரதத்தை கைவிடுமாறு அவரிடம் வேண்டுகோள் விடுத்தார்.
கடந்த மாதம், ராஜபாளையத்தில் நடந்த விழா ஒன்றில், கவிஞர் வைரமுத்து ஆண்டாளை அவதூறாக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. வைரமுத்துவுக்கு பல்வேறு இந்து அமைப்புகள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
இவ்விவகாரத்தில், வைரமுத்து ஆண்டாள் சன்னதியில் நேரில் வந்து மன்னிப்பு கேட்கவேண்டுமென, ஸ்ரீவில்லிபுத்துார் ஜீயர் சடகோபராமானுஜர் உண்ணாவிரதம் மேற்கொண்டார். பின்னர், ஒரே நாளில் உண்ணாவிரதத்தை விலக்கிக் கொண்ட அவர் பிப்ரவரி 3-ம் தேதிக்குள் வைரமுத்து மன்னிப்பு கேட்க வேண்டும் இல்லாவிட்டால் மீண்டும் உண்ணாவிரதம் இருக்கப்போவதாக எச்சரித்தார். அதன்படி நேற்று (பிப்.8) உண்ணாவிரதம் தொடங்கினார். இன்று அவர் 2-வது நாளாக உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டுள்ளார்.
இந்நிலையில், ஜீயரை பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா நேரில் சந்தித்துப் பேசினார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், "உடலை வருத்தி உண்ணாவிரதம் இருக்க வேண்டாம் என ஜீயரிடம் கூறினேன். அவர் நல்ல முடிவு எடுப்பார் என நினைக்கிறேன்.
ஆண்டாள் குறித்து ஆராய்ச்சி நடத்தவில்லை என இண்டியானா பல்கலைக்கழகம் மறுத்துள்ளது. பொய்யான சந்தேக விதைகளை வைரமுத்து தூவுகிறார். முதலில் பெருமைகளை சொல்லிவிட்டு கடைசியில் ஒருவரை இகழ்வது வைரமுத்துவின் பாணி.
அதேபோல், மோட்சம் பற்றி திருவள்ளுவர் பேசவில்லை என வைரமுத்து பேசியதும் பொய். தமிழ் தாத்தா உ.வே.ச குறித்தும் தனது கட்டுரையில் தவறான தகவல்களை வைரமுத்து கூறியுள்ளார்" இவ்வாறு ராஜா கூறினார்.