

சென்னை: பணி நிரந்தரம் செய்யக்கோரி எம்ஆர்பி ஒப்பந்த செவிலியர்கள், சென்னையில் வரும் 21-ம் தேதி பெருந்திரள் முறையீடு போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். இதுதொடர்பாக தமிழ்நாடு எம்ஆர்பி செவிலியர்கள் மேம்பாட்டு சங்கத்தின் நிர்வாகிகள் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தின் (எம்ஆர்பி) போட்டித் தேர்வு மூலம் 2015-ம் ஆண்டில் 8,500 செவிலியர்களும், 2019-ல் 3,500 செவிலியர்களும் தேர்வு செய்யப்பட்டனர். அவர்கள் தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் படிப்படியாக ஒப்பந்த முறையில் பணியில்அமர்த்தப்பட்டனர். பணியில் சேரும்போது, இரண்டு ஆண்டுகளில் பணி நிரந்தரம் செய்யப்படும் என்று பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.
மகப்பேறு விடுப்பு ஊதியம்: ஆனால், இதுவரை 5,500 செவிலியர்கள் மட்டுமே பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளனர். மற்றவர்கள் 2 ஆண்டுகளை கடந்தும் இன்னும் பணி நிரந்தரம் செய்யப்படவில்லை. நாங்களும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். ஆனால், அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிட்டதுபோல் எம்ஆர்பி செவிலியர்கள் அனைவரையும் பணி நிரந்தரம்செய்ய வேண்டும். மகப்பேறு விடுப்புக்கான ஊதியத்தை வழங்க வேண்டும்.
நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப பணியிடங்களை உருவாக்க வேண்டும். கரோனா காலகட்டத்தில் இரண்டரை ஆண்டுகள் பணிபுரிந்தவர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர். அவர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி மனு கொடுப்பது, கோரிக்கைகள் அடங்கிய அட்டை அணிந்து, அனைத்து மாவட்டங்களிலும் போராட்ட ஆயத்தமாநாடு போன்ற பல்வேறு போராட்டங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறோம். ஆனால், தமிழக அரசு எங்களின் கோரிக்கைகளுக்கு துளியும் செவிசாய்க்கவிலை.
அதனால், வரும் 21-ம் தேதி சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டிஎம்எஸ் வளாகத்தில் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி பெருந்திரள் முறையீடு போராட்டத்தில் ஈடுபட இருக்கிறோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.