

சென்னை: சென்னையில் கடந்த 12-ம் தேதி 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
17-ம் தேதி தேனாம்பேட்டையில் நடைபெற்ற போராட்டத்தின் போது, அமைச்சர் கீதாஜீவன் பேச்சுவார்த்தை நடத்தி,முதல்வருடன் கலந்து பேசி தீர்வு காண நடவடிக்கை எடுப்பதாக கூறியிருந்தார்.
இந்நிலையில், தொடர்ந்து 5-வது நாளாக தி.நகர் பேருந்துநிலையம் முன்பு சாலையில்அமர்ந்து பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் நேற்று திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சாலை நடுவே அமர்ந்து தங்களது கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதனால், உஸ்மான் சாலையில்கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த தி.நகர் போலீஸார், மாற்றுத் திறனாளிகளை களைந்து போகும்படி கூறினர்.ஆனால், அவர்கள் களைந்து செல்லாமல், தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, போலீஸார்அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்ட அவர்களை அகற்ற முயன்றனர். மறியலில் ஈடுபட்ட 50-க்கும் மேற்பட்டவர்களை போலீஸார் கைது செய்து அருகில் உள்ள மண்டபத்துக்கு கொண்டு சென்றனர். இதனால், அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.