Published : 19 Feb 2024 06:05 AM
Last Updated : 19 Feb 2024 06:05 AM
சென்னை: ரயில்வே பொறியியல் பணி காரணமாக, சென்னை கடற்கரை- தாம்பரம் வழித்தடத்தில் நேற்று 44 மின் ரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டது. இதனால், பேருந்து, மெட்ரோ ரயில்களில் கூட்டம் அலைமோதியது. மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில், கூடுதலாக 150 பேருந்துகள் இயக்கப்பட்டதால், பயணிகளுக்கு பேருதவியாக இருந்தது.
சென்னை எழும்பூர் - விழுப்புரம் மார்க்கத்தில் கோடம்பாக்கம் - தாம்பரம் இடையே பொறியியல் பணி காரணமாக, நேற்று காலை 11 மணிமுதல் பிற்பகல் 3.30 மணிவரை 44 மின் ரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டது. முன்னதாக இது தொடர்பாக,ரயில்வே நிர்வாகம் சார்பில் அறிவிப்பு செய்யப்பட்டிருந்தது.
இந்த நடவடிக்கையால், ரயில் நிலையங்களுக்கு வரும் பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்திருந்தது. இருப்பினும், இத்தகவலை அறியாமல் வந்த பயணிகள் பேருந்து, மெட்ரோ ரயில் நிலையத்தை நோக்கிப் படையெடுத்தனர். இதன் காரணமாக, பேருந்து, மெட்ரோ ரயில்களில் கூட்டம் வழக்கத்தைவிட அதிகமாக இருந்தது. மேலும், பயணிகள் வசதிக்காக, கூடுதல் பேருந்துகளை இயக்க மாநகர போக்குவரத்துக் கழகத்துக்கு ரயில்வே நிர்வாகம் வேண்டுகோள் விடுத்திருந்தது.
அதன்படி, சென்ட்ரல், மாம்பலம், கிண்டி, தாம்பரம் உள்ளிட்ட முக்கிய பேருந்து நிலையங்களிலிருந்து 150 பேருந்துகள் கூடுதலாக இயக்கப்பட்டன. இதனால், பொதுமக்கள் பேருந்துகளில் நெரிசலின்றி பயணித்தனர். மேலும், மெட்ரோ ரயில்களும் அடிக்கடி (7 நிமிடத்துக்கு ஒரு ரயில்) இயக்கப்பட்டதால், பயணிகளுக்கு வசதியாக இருந்தது. பேருந்து, மெட்ரோ ரயில் நிலையங்கள் நேற்று நாள் முழுவதும் பரபரப்பாகக் காணப்பட்டன.
பயணிகள் தவிப்பு: ஆவடி ரயில் நிலையத்தில் பழைய நடைமேம்பாலத்தை இடித்து அப்புறப்படுத்தும் பணி நேற்று முன்தினம் இரவு 10 மணிமுதல் மறுநாள் அதிகாலை 4.30 மணிவரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்காக, சென்னை சென்ட்ரல்- திருவள்ளூர், அரக்கோணம் இடையே இரவு நேரத்தில் 10 ரயில்கள் ரத்து செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதிகாலை 4.30 மணிக்கு முடிய வேண்டிய பணிகள் காலை 6.30 வரை நடைபெற்றது.
இதனால், காலை நேரத்தில் ரயில் நிலையத்துக்கு வந்திருந்த பயணிகள் தவித்தனர். காலை 6.30 மணிக்கு பிறகு, அரக்கோணம் மற்றும் திருவள்ளூரிலிருந்து சென்ட்ரலுக்கு வரும் புறநகர் மின்சார ரயில்கள் இயக்கப்பட்டன. இந்த ரயில்கள் விரைவு ரயில்கள் செல்லும் பாதையில் இயக்கப்பட்டதால், பட்டாபிராம் முதல் பட்டரவாக்கம் வரை உள்ள ரயில் நிலையங்களில் ரயில்கள் நிறுத்தப்படவில்லை. இந்த ரயில் நிலையங்களில் ரயிலுக்காகக் காத்திருந்த பயணிகள் கடும் அவதிப்பட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT