Last Updated : 18 Feb, 2024 07:22 PM

 

Published : 18 Feb 2024 07:22 PM
Last Updated : 18 Feb 2024 07:22 PM

திருச்சி - 23 வயதில் சிவில் நீதிபதியான விவசாய கூலித் தொழிலாளியின் மகன்

பாலமுருகன்

திருச்சி: திருச்சி மாவட்டம் குண்டூர் அருகே உள்ள அயன்புத்தூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாய கூலித் தொழிலாளியின் மகனான பாலமுருகன் (23) சிவில் நீதிபதியாக தேர்வாகியுள்ளார். மாநில அளவில் 33வது இடத்தையும், திருச்சி மாவட்டத்தில் முதலிடமும் பிடித்துள்ளார். எளிய ஓட்டு வீட்டில் படித்து நீதிபதியான இவரை அப்பகுதியைச் சேர்ந்த தன்னார்வலர்கள் பலரும் நேரில் சென்று பாராட்டி வருகின்றனர்.

தமிழ்நாட்டில் கீழமை நீதிமன்றங்களில், காலியாக உள்ள 245 சிவில் நீதிபதி பணியிடங்களுக்கு தேர்வினை அண்மையில் நடத்தியது. இதில், 6031 ஆண்களும், 6005 பெண்களும், மூன்றாம் பாலினத்தவர் ஒருவர் என மொத்தம் 12,037 பேர் விண்ணப்பித்திருந்தனர். இவர்களுக்கான முதல் நிலை தேர்வு கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் 19-ம் தேதி சென்னை, மதுரை , திருச்சி உள்ளிட்ட 9 இடங்களில் தேர்வு மையங்களில் நடைபெற்றது.

இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மெயின் தேர்வு நவம்பரில் நடந்தது. முதல்நிலை தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் நேர்முக தேர்வுக்கு தற்காலிகமாக 472 பேர் அழைக்கப்பட்டு, அதற்கான முடிவுகள் பிப்.10-ம் தேதி வெளியிடப்பட்டது.

அதன்படி, திருச்சி மாவட்டம் குண்டூர் அருகே உள்ள அயன்புத்தூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாய கூலித் தொழிலாளியான மாமுண்டி-விஜயா தம்பதியின் மகன் பாலமுருகன் (23) சிவில் நீதிபதியாக தேர்வாகியுள்ளார்.

திருச்சி அரசு சட்டக்கல்லூரியில் இளநிலை சட்டம் பயின்ற இவர், ஏழ்மை நிலையை கருதி விவசாய கூலி தொழிலுக்கு சென்ற வந்தார். ஓய்வு நேரங்களில் தன் கனவாக சிவில் நீதிபதியாக வேண்டும் என்ற முனைப்பில் சட்ட பயில்வதையே நோக்கமாக கொண்டிருந்தார்.

இந்தநிலையில், நடப்பாண்டில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய சிவீல் நிதிபதி தேர்வு முடிவில், பாலமுருகன் மாநில அளவில் 33வது இடத்தையும் திருச்சி மாவட்டத்திலேயே முதலிடம் பிடித்துள்ளார். எளிய ஓட்டுவீட்டு கொட்டகையில் படித்து நீதிபதியான இவரை அப்பகுதியைச் சேர்ந்த தன்னார்வலர்கள் பலரும் நேரில் சென்று பாராட்டி வருகின்றனர். பயிற்சி காலத்திற்குப் பின்னர் நீதிபதியாக பதவியேற்க உள்ளார்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x