

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் ஆமத்தூர் அருகே பட்டாசு ஆலையில் இன்று திடீர் வெடி விபத்து ஏற்பட்டது. விருதுநகர் மாவட்டம் ஆமத்தூர் அருகே உள்ள ஓ.கோவில்பட்டியில் சங்கரலிங்கபுரத்தைச் சேர்ந்த சுந்தரலட்சுமி என்பவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலை உள்ளது.
நாக்பூரில் உள்ள மத்திய பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறையின் அனுமதிபெற்று இயங்கும் இந்த பட்டாசு ஆலையில் 30க்கும் மேற்பட்ட அறைகளில் பேன்ஸி ரக பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இன்று பிற்பகல் இந்த பட்டாசு ஆலையில் மருந்துகள் வைக்கப்பட்டிருந்த அறையில் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. மேலும், அடுத்தடுத்து இருந்த இரு அறைகளும் இடிந்து தரைமட்டமாயின.
இன்று விடுமுறை தினம் என்பதால் தொழிலாளர்கள் யாரும் பணிக்கு வரவில்லை. இதனால் அதிர்ஷ்டவசமாக பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. தகவலறிந்த விருதுநகர் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று கட்டிட இடிபாடுகளை அகற்றி தீயை அணைத்தனர். ஆமத்தூர் போலீஸார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தியதில், வெப்பம் காரணமாக ரசாயன மாற்றம் ஏற்பட்டு மருந்துகள் வெடித்துள்ளது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது. இந்த வெடி விபத்து குறித்து ஆமத்தூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.