மதுரை | சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம் விலை குறைந்தது
மதுரை: நீண்ட நாட்களாக விலை அதிகமாக விற்பனை செய்யப்பட்ட சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம் விலை கடந்த சில நாட்களாக விலை குறைந்ததால் பொதுமக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.
அன்றாட சமையலுக்கு தேவைப்படும் காய்கறிகள் விலையைப் பொறுத்தவரையில் அவற்றின் விலை உயர்ந்தால் சில வாரங்களில் குறைந்துவிடும். ஆனால், மதுரை மாட்டுத்தாவணி ஒருங்கிணைந்த காய்கறி மார்க்கெட்டில் வடகிழக்கு பருவமழை பெய்யத் தொடங்கியபோது உயரத் தொடங்கிய காய்கறிகள் விலை கடந்த பல மாதங்களாக குறையாமல் நீடித்து வந்தது. தக்காளி கிலோ ரூ.50 முதல் ரூ150 வரை கடந்த சில மாதம் முன்பு வரை விற்பனையானது. அதன்பின் கடந்த சில வாரங்களுக்கு முன் தக்காளி விலை ரூ.30 முதல் 35-க்கு குறைந்தாலும் இந்த விலை கடந்த 3 மாதத்துக்கும் மேல் நீடித்தது.
தற்போதுதான் நீண்ட நாட்களுக்குப் பிறகு தக்காளி கிலோ ரூ.10 முதல் ரூ.20 விலை குறைந்துள்ளது. பொதுவாக தக்காளி விலை கடந்த காலங்களில் ரூ.10 முதல் ரூ.15 வரை நிலையாக இருக்கும். விலை வீழ்ச்சியடைந்தால் ரூ.5 ஆக குறையும். இதுபோன்றுதான், மற்ற காய்கறிகள் விலையும் கூடி, குறையும்.
இந்நிலையில் மதுரை மாட்டுத்தாவணி ஒருங்கிணைந்த காய்கறி மார்க்கெட்டில் சின்ன வெங்காயம் விலை கடந்த சில மாதமாக ரூ.60 முதல் 90 வரை விற்பனையானது. இதற்கு போட்டியாக பெரிய வெங்காயமும் ரூ.40-க்கு குறையாமல் விற்பனையானது. தற்போது நீண்ட நாட்களுக்குப் பின்னர் இரு வெங்காயத்தின் விலையும் குறைந்துள்ளது. சின்ன வெங்காயம் விலை கிலோ ரூ.20 முதல் ரூ.40 வரையிலும், பெரிய வெங்காயம் கிலோ ரூ.10 முதல் ரூ.35 வரையிலும் விற்பனையாகிறது. வெங்காயம் அன்றாட சமையலில் அனைத்து வகை உணவுகளுக்கும் தவிர்க்க முடியாத காய்கறியாகும். தற்போது இதன் விலை குறைந்துள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
