

லஞ்ச வழக்கில் கைதான ஆம்பூர் டிஎஸ்பி தன்ராஜ், எஸ்ஐ லூர்து ஜெயராஜ் இருவரையும் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க வேலூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதனையடுத்து இருவரும் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
முன்னதாக, ஆற்று மணல் கடத்துவதற்கு உடந்தையாக இருப்பதற்கு, ரூ.1.45 லட்சம் லஞ்சம் வாங்கிய துணை காவல் கண்காணிப்பாளர் தன்ராஜ் மற்றும் உதவி காவல் ஆய்வாளர் லூர்துஜெயராஜ் ஆகியோரை லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் நேற்று கைது செய்தனர்.
ஒரு லாரிக்கு ரூ.20 ஆயிரம் என 6 லாரிக்கு ரூ.1,20,000 மற்றும் பொங்கல் போனஸாக ரூ.30,000 என மொத்தம் ரூ.1,50,000 கொண்டுவந்து கொடுக்க வேண்டும் என்று டிஎஸ்பி தன்ராஜ் மிரட்டியுள்ளார்.
இதுகுறித்து தகவல் அறிந்த லஞ்ச ஒழிப்பு போலீஸார் லாரி உரிமையாளர்களிடம் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை கொடுத்து மறைந்திருந்தனர்.
லஞ்சம் வாங்கியபோது டிஎஸ்பி தன்ராஜ் கையும் களவுமாக பிடிபட்டார்.
பிடிபட்ட டிஎஸ்பி தன்ராஜ், இதற்கு முன் விருதுநகர் மாவட்டத்தில் அருப்புக்கோட்டை மற்றும் மதுவிலக்கு பிரிவில் இருந்த போதும் இதே போன்றுதான் செயல்பட்டதாக புகார் எழுந்தது. ஆனால் சிக்கவில்லை.
இந்நிலையில், டிஎஸ்பி தன்ராஜ் மற்றும் எஸ்.ஐ. லூர்து ஆகிய இருவரும் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.