Last Updated : 18 Feb, 2024 03:40 PM

 

Published : 18 Feb 2024 03:40 PM
Last Updated : 18 Feb 2024 03:40 PM

திமுக சின்னத்தில் போட்டியிடமாட்டோம் என கூட்டணிக் கட்சிகள் கூறவில்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

புதுச்சேரியில் சிங்காரவேலரின் சிலைக்கு தமிழக அமைச்சர் சுப்பிரமணியன் மாலை அணிவித்தார் மாநில அமைப்பாளர் சிவா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

புதுச்சேரி: தமிழகத்தில் வரும் மக்களவைத் தேர்தலின் போது திமுக சின்னத்தில் போட்டியிடமாட்டோம் என கூட்டணிக் கட்சிகளில் யாரும் கூறவில்லை என சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார்.

புதுச்சேரியில் தியாகி சிங்காரவேலரின் 165-வது பிறந்த நாளை முன்னிட்டு கடலூர் சாலையில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு திமுக சார்பில் இன்று மாலை அணிவித்த மரியாதை செலுத்திய அவர் பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “புதுவை மாநிலத்தில் பஞ்சுமிட்டாய்களில் புற்றுநோயை உண்டாக்கும் வேதிப் பொருட்கள் கலந்த வண்ணம் இருப்பது தெரியவந்ததை அடுத்து தடை விதிக்கப்பட்டுள்ளது. அச்செய்தியை தமிழக சுகாதாரத்துறை அறிந்து பல தமிழக மாவட்டங்களில் பஞ்சு மிட்டாய்கள் சோதனைக்கு உள்படுத்தப்பட்டன. சோதனையில் புற்றுநோயை உண்டாக்கும் வேதிப் பொருள்கள் இருந்ததை அறிந்து வண்ண பஞ்சு மிட்டாய்க்கு தமிழகத்தில் தடை விதிக்கப்பட்டது. அதே நேரத்தில் வெண்மை பஞ்சுமிட்டாய்க்கு தடை விதிக்கப்படவில்லை.

திராவிட மாடல் பிரிவினையை பேசுவதாக மத்திய நிதியமைச்சர் உண்மைக்கு மாறான கருத்தைத் தெரிவித்துள்ளார். தூங்குபவர்களை எழுப்பலாம், தூங்குவது போல நடிப்பவர்களை எழுப்பமுடியாது. எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மதுரையில் நில ஆர்ஜிதம் செய்யவில்லை என நிதியமைச்சர் கடந்த 2023 ஆம் ஆண்டு மக்களவையில் தெரிவித்தார்.

ஆனால், கடந்த 2019 ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் மோடி மதுரையில் அடிக்கல் நாட்டினார். ஆர்ஜிதம் செய்யப்படாத நிலத்தில் பிரதமர் அடிக்கல் நாட்டியது தவறானது. நில ஆர்ஜிதம் செய்யாமல் அடிக்கல் நாட்டி இருந்தால் முதல் குற்றவாளி எடப்படி பழனிசாமி. அது தெரியாமல் பிரதமர் வந்து அடிக்கல் நாட்டி இருந்தால் அவரும் தவறுக்கு உரியவர்.

திமுக சின்னத்தில் மக்களவைத் தேர்தலில் போட்டியிட மாட்டோம் என திமுக கூட்டணிக் கட்சிகள் யாரும் கூறவில்லை. புதுவை மக்களவைத் தேர்தலில் யார் போட்டியிடுவது என்பது பற்றி திமுக தலைவரே முடிவெடுப்பார் என்று தெரிவித்தார்.முன்னதாக அவருடன் திமுக மாநில அமைப்பாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான சிவா, எம்.எல்.ஏ.க்கள் அனிபால்கென்னடி, சம்பத் உள்ளிட்டோர் சிங்காரவேலர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x