Published : 20 Feb 2018 08:41 AM
Last Updated : 20 Feb 2018 08:41 AM

மேகாலயா தேர்தல் பிரச்சாரத்தில் வெடிகுண்டு தாக்குதல்: தேசியவாத காங்கிரஸ் வேட்பாளர் பலி- 2 பாதுகாப்புப் படை வீரர்களும் பரிதாப மரணம்

மேகாலயாவில் குண்டுவெடிப்பில் சிக்கி தேசியவாத காங்கிரஸ் கட்சி வேட்பாளர், 2 பாதுகாப்புப் படை வீரர்கள் பலியாயினர். இதனால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

வடகிழக்கு மாநிலங்களான திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து மாநிலங்களுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. திரிபுராவில் கடந்த 14-ம் தேதி வாக்குப் பதிவு நடந்தது. மேகாலயா, நாகாலாந்தில் வரும் 27-ம் தேதி வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. இதற்காக 2 மாநிலங்களிலும் அரசியல் கட்சியினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேகாலயா வில்லியம் நகர் சட்டப்பேரவை தொகுதிக்கு, சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி சார்பில் சமூக சேவகர் ஜோனாத்தன் என்.சங்மா வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை மேகாலயாவின் கிழக்கு கரோ மலைப் பகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தார். பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு ஜோனாத் தன் இரவு 7.50 மணிக்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது சமந்தா என்ற இடத்தில் சக்தி வாய்ந்த வெடிகுண்டு வெடித்துச் சிதறியது.

அதில் ஜோனாத்தன் சென்ற வாகனம் சிக்கி பலத்த சேதம் அடைந்தது. அதில் ஜோனாத்தன் மற்றும் உடன் சென்ற பாதுகாப்புப் படை வீரர்கள் 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.

மேகாலயாவின் கிழக்கு கரோ மலைப் பகுதியின் தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவராக ஜோனாத்தன் பதவி வகித்தார். முன்னதாக ஜோனாத்தனை எதிர்த்து வில்லியம் நகரின் பல இடங்களில் எச்சரிக்கை சுவரொட்டிகளை மர்ம நபர்கள் ஒட்டியிருந்தனர். அதில், ‘ஜோனாத்தனுக்கு யாராவது வாக்களித்தால், அவர்கள் கொல்லப்படுவார்கள்’ என்று மிரட்டல் விடுக்கப்பட்டி ருந்தது.

இதுகுறித்து மேகாலயமா முதல்வர் முகுல் சங்மா தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார். மாநில பாஜக.வினரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x