

கோவை: இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டத்தில் மதச்சார்பின்மை, பன்முகத்தன்மைக்கு ஆபத்து வந்துள்ளது என சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.சந்துரு தெரிவித்தார்.
கோவையில் அனைத்து இந்திய மாணவர் பெருமன்றத்தின் சட்ட மாணவர்கள் மாநில மாநாடு நேற்று நடைபெற்றது. இதில் `அரசியலமைப்புச் சட்டம் எனும் பேராயுதம்' என்ற தலைப்பில் சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.சந்துரு பேசியது: அரசியலமைப்புச் சட்டத்துக்கு இறுதிவடிவம் கொடுத்த அம்பேத்கர், இந்திய மக்கள் சமூக, பொருளாதாரத்தில் விடுதலை பெறவில்லையெனில் அரசியலமைப்புச் சட்டம் சுக்கு நூறாகிவிடும் எனக் கூறியிருந்தார்.
அரசியலமைப்புச் சட்டத்தை உறுதிமொழியாக ஏற்றுக்கொண்டு பதவிக்கு வந்தவர்களால், அரசியலமைப்புச் சட்டத்துக்கு ஆபத்து வந்துள்ளது. மேலும், அரசியலமைப்புச் சட்டம் வேறு திசையில் திரும்புவதையும் பார்க்க முடிகிறது. நாம் அனைவரும் படிக்க வேண்டும். ஆட்சி, அதிகாரத்தில் இருந்து கொண்டு என்ன வேண்டுமானாலும் செய்யலாமா என்பது தான் இப்போதைய கேள்வியாக உள்ளது.
இந்தியாவில் 75 ஆண்டுகள் ஆகியும் அரசியலமைப்புச் சட்டம் பாதுகாப்பாக இருப்பதற்கு ஒரே காரணம் அம்பேத்கர் தான். நாம் எல்லோரும் இந்திய மக்கள், மக்களின் கையில் தான் உரிமை உள்ளது என்பதை அரசியலமைப்புச் சட்டத்தின் மூலம் நிறுவியவர். இந்தியாவின் அரசமைப்புச் சட்டத்தில் மதச்சார்பின்மை, பன்முகத்தன்மைக்கு ஆபத்து வந்துள்ளது. நாம் எல்லோரும் அரசமைப்புச் சட்டம் தான் வேண்டும் என்று மக்களிடம் சொல்ல வேண்டும், என்றார்.
முன்னதாக மகாத்மா காந்தி, அம்பேத்கர், மூத்த வழக்கறிஞர் என்.டி.வானமாமலை, நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யர் ஆகிய தலைவர்களின் உருவப் படங்கள் திறக்கப்பட்டன. மாநாட்டில் சமூக மாற்றத்தில் வழக்கறிஞர்களின் பங்கு என்ற தலைப்பில் மூத்த வழக்கறிஞர் ப.பா.மோகன் பேசினார். மேலும் வழக்கறிஞர் கே.சுப்பிரமணியன் எழுதிய பில்கீஸ் பானு என்னும் நூல் வெளியிடப்பட்டது.
மாநாட்டில், அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் மாநில தலைவர் இப்ராஹிம், கோவை மாவட்ட செயலாளர் பிரசாந்த், இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தின் மாநில துணைப் பொதுச் செயலாளர் பாரதி, நிர்வாகிகள் சினேகா, முன்னாள் மாநில தலைவர் எஸ்.ராதா கிருஷ்ணன் உள்ளிட்ட சட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.