

சென்னை: சென்னை பேசின்பாலம் யார்டு அருகே ஏலகிரி விரைவு ரயிலின் இன்ஜின் தடம் புரண்டது. ரயில்வே ஊழியர்கள் 4 மணி நேரம் போராடி, கீழே இறங்கிய ரயிலின் சக்கரங்களை தண்டவாளத்தில் ஏற்றி, மீண்டும் இயக்கினர்.
ஜோலார்பேட்டையில் இருந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு நேற்று காலை 9.15 மணிக்கு ஏலகிரி விரைவு ரயில் வந்தடைந்தது. இந்த ரயிலில் இருந்து பயணிகள் இறங்கி சென்றனர். தொடர்ந்து, இந்த ரயிலை பராமரிப்பு பணி மேற்கொள்ள, பேசின் பாலம் யார்டுக்கு அனுப்ப முடிவு செய்தனர். அதன்படி, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து முற்பகல் 11.40 மணிக்கு காலிபெட்டிகளுடன் ஏலகிரி விரைவு ரயில் பேசின் பாலம் யார்டுக்கு புறப்பட்டது.
இந்த ரயில் முற்பகல் 11.45 மணி அளவில் பேசின் பாலம் யார்டு அருகே சென்று கொண்டிருந்த போது, ரயிலின் இன்ஜின் திடீரென தடம் புரண்டது. இதில், முன்புறத்தில் 3 ஜோடி சக்கரங்கள் தண்டவாளத்தை விட்டு கீழே இறங்கின. இது குறித்து ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
4 மணி நேரத்துக்கு பிறகு...: தகவலின் பேரில், ரயில்வே அதிகாரிகள், ஊழியர்கள் விரைந்து வந்து, சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும், விரைவு ரயில்கள் செல்வதில் காலதாமதம் ஏற்படாமல் இருக்க, மற்றொரு பாதைகளில் ரயில்கள் இயக்கப்பட்டன. இதற்கிடையில், சுமார் 4 மணி நேரத்துக்கு பிறகு, கீழே இறங்கிய ரயில் சக்கரங்களை தண்டவாளத்தில் ஏற்றி, ரயிலை மீண்டும் இயக்கினர்.
சென்ட்ரல் ரயில் நிலையம் மற்றும் பேசின் பாலம் அருகே கடந்த 5 நாட்களில் மட்டும் மூன்று சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. கடந்த 13-ம் தேதி டீசல் ரயில் இன்ஜின் பேசின் பாலம் அருகே தடம் புரண்டது. கடந்த 14-ம் தேதி சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே காலி சரக்கு ரயிலின் இரண்டு பெட்டிகள் தடம் புரண்டன. தற்போது, காலி ரயிலின் இன்ஜின் தடம் புரளும் சம்பவம் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.