Published : 18 Feb 2024 04:04 AM
Last Updated : 18 Feb 2024 04:04 AM
சென்னை: அம்ரித் பாரத் நிலையம் திட்டத்தின் கீழ், தெற்கு ரயில்வேயின் சென்னை ரயில்வே கோட்டத்தில் 7 ரயில் நிலையங்களை மேம்படுத்தும் பணி தொடங்க உள்ளது. இப்பணிகளுக்கு பிரதமர் மோடி, காணொலி வாயிலாக வரும் 28-ம் தேதி அடிக்கல் நாட்டுகிறார்.
நாட்டின் பல்வேறு முக்கிய நகரங்களில் ரயில் நிலையங்களை மறுசீரமைக்கும் திட்டத்தை ரயில்வே அமைச்சகம் செயல்படுத்துகிறது. இதன் ஒரு பகுதியாக, ‘அம்ரித் பாரத் ரயில் நிலைய திட்டம்’ என்ற புதிய திட்டத்தின் கீழ், படிப்படியாக 1,309 ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட உள்ளன. அதன்படி, தெற்கு ரயில்வேயில் 2-வது கட்டமாக, 100-க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்களை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த ரயில் நிலையங்களை மேம்படுத்தும் பணிகளுக்கு பிரதமர் மோடி வரும் 28-ம் தேதி அடிக்கல் நாட்டுகிறார். இவற்றில், சென்னை ரயில்வே கோட்டத்தில் 7 ரயில் நிலையங்களை மேம்படுத்த அடிக்கல் நாட்டப்பட உள்ளது. இது தவிர, பணிகள் முடிக்கப்பட்ட 7 ரயில்வே மேம்பாலங்கள், 28 சுரங்கப் பாதைகள் மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட உள்ளன.
இது குறித்து சென்னை ரயில்வே கோட்ட அதிகாரிகள் கூறியதாவது: சென்னை ரயில்வே கோட்டத்தில் அம்ரித் பாரத் ரயில் நிலையம் திட்டத்தின் கீழ், முதல் கட்டமாக 8 ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்படுகின்றன. இரண்டாம் கட்டமாக, 7 ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட உள்ளன. அதாவது, ரூ.21.5 கோடி மதிப்பில் அம்பத்தூர் ரயில் நிலையமும், சென்னை கடற்கரை ரயில்நிலையம் ரூ.14.50 கோடி மதிப்பிலும், பூங்கா ரயில் நிலையம் ரூ.10.60 கோடி மதிப்பிலும், கிண்டி ரயில் நிலையம் ரூ.13.50 கோடி மதிப்பிலும், மாம்பலம் ரயில் நிலையம் ரூ.14.50 கோடி மதிப்பிலும், பரங்கிமலை ரயில் நிலையம் ரூ.14 கோடி மதிப்பிலும், சூலூர்பேட்டை ரூ.12.50கோடி மதிப்பிலும் மேம்படுத்தப்பட உள்ளன.
இந்த ரயில் நிலையங்களில் தொடங்கப்பட உள்ள மேம்பாட்டுப் பணிகளுக்கு பிரதமர் மோடி காணொலி வாயிலாக வரும் 28-ம் தேதி அடிக்கல் நாட்டுகிறார். இது தவிர, பணிகள் முடிக்கப்பட்ட 7 ரயில்வே மேம்பாலங்கள், 28 சுரங்கப் பாதைகள் மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட உள்ளன. ரயில்வே மேம்பாலங்களை பொருத்தவரை, சென்னை சென்ட்ரல் - அரக்கோணம் மார்க்கத்தில் 4 ரயில்வே மேம்பாலங்களும், சென்னை கடற்கரை - விழுப்புரம் மார்க்கத்தில் 3 ரயில்வே மேம்பாலங்களும் அமைக்கப்பட்டுள்ளன. சென்னை சென்ட்ரல் - கூடூர் மற்றும் அரக்கோணம் மார்க்கங்களில் தலா 14 சுரங்கப் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. ரயில்வே மேம்பாலங்கள் அமைக்க தலா ரூ.30 கோடியும், சுரங்கப் பாதைகள் அமைக்கதலா ரூ.5 கோடியும் செலவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
தெற்கு ரயில்வேயில் 2-ம்கட்டமாக, 100-க்கும் மேற்பட்டரயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட உள்ளன. இதுபோல, பணிகள் முடிக்கப்பட்டுள்ள 82 ரயில்வே மேம்பாலங்கள், 117 சுரங்கப்பாதைகள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட உள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT