பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் பிப்.23-ல் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு: அமைச்சர் கீதா ஜீவன் தகவல்

அமைச்சர் கீதா ஜீவன் | கோப்புப் படம்
அமைச்சர் கீதா ஜீவன் | கோப்புப் படம்
Updated on
1 min read

சென்னை: 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் 4-வது நாளாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை 23-ம் தேதி பேச்சு வார்த்தைக்கு அழைத்திருப்பதாக அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்தார்.

சென்னையில் கடந்த 12-ம் தேதி 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று 4-வது நாளாக தேனாம்பேட்டை டி.எம்.எஸ். வளாகம் அருகே திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அண்ணா சாலையில் 1 மணி நேரத்துக்கும் மேலாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

சாலை மறியலில் ஈடுபட்ட 30-க்கும் மேற்பட்டவர்களை போலீஸார் கைது செய்து அருகிலுள்ள மண்டபத்துக்கு கொண்டு சென்றனர். இதைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களோடு சென்னைகாமராஜர் சாலையில் உள்ள மாற்றுத் திறனாளிகள் நல ஆணையரகத்தில் சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: மாணவர்களின் கோரிக்கை குறித்து, பள்ளிக் கல்வி, உயர் கல்வி, ஆசிரியர் தேர்வு வாரியம், தமிழக அரசு தேர்வாணையம் ஆகிய துறைகள் சேர்ந்து முடிவெடுக்க வேண்டும். தனியாக மாற்றுத் திறனாளிகள் துறை மட்டும் முடிவெடுக்க முடியாது. எனவே வரும் 23-ம் தேதி இந்த துறைகளுடன் பேச்சுவார்த்தை நடத்த பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் வர வேண்டும் என்று தெரிவித்துள்ளோம்.

உடனே முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்று வேலை உடனே பெற்றுத்தர வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளனர். உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் பதவி உயர்வில் இட ஒதுக்கீடு வேண்டுமென கேட்டுள்ளனர். அது குறித்தும் உரிய நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்துள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in