

பெரியகுளம்: தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு வரும் 24-ம் தேதி தேனியில் அமமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பங்கேற்க உள்ளார்.
அமமுக சார்பிலான பொதுக்கூட்டத்தில், கட்சியின் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் கலந்து கொள்கிறார். இக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதை ஏற்று, ஓ.பன்னீர் செல்வம் கலந்து கொள்ள உள்ளார்.
இது குறித்த ஆலோசனைக் கூட்டம் பெரியகுளம் கைலாசபட்டியில் உள்ள அவரது பண்ணை வீட்டில் நடைபெற்றது. இதில், அமமுக பொதுக் கூட்டத்தில் தனது அணி சார்பில் திரளாகக் கலந்து கொள்ள வேண்டும் என்று கட்சியினரிடையே வலியுறுத்தினார்.இதில் மாவட்ட அளவிலான ஒன்றிய, நகர நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.