Published : 02 Feb 2018 12:12 PM
Last Updated : 02 Feb 2018 12:12 PM

நீட் தேர்விலிருந்து விலக்கு பெற இரு வழிகள்: அன்புமணி விளக்கம்

இரு வழிகளில் நீட் தேர்விலிருந்து விலக்கு பெற முடியும் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி விளக்கம் அளித்துள்ளார்.

மேலும், இந்த இரு வழிகளை மேற்கொள்ள தமிழக அரசால் முடியாவிட்டால், நீட் தேர்வு விவகாரத்தில் தோல்வியை ஒப்புக்கொண்டு அதிமுக அரசு உடனடியாக பதவி விலக வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''தமிழ்நாட்டில் நீட் தேர்வு நடத்தப்படுவதை தடுக்க முடியாது என்றும், மருத்துவக் கல்லூரிகளில் சேர விரும்பும் அனைவரும் நீட் தேர்வு எழுதியே தீர வேண்டும் என்றும் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். அமைச்சர் செங்கோட்டையனின் இந்த அறிவிப்பு அதிர்ச்சியளிக்கிறது.

நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக மக்களையும், மாணவர்களையும் பினாமி அரசு ஏமாற்றி வருகிறது. தமிழகத்திற்கு நீட் தேர்விலிருந்து விலக்கு கோருவதற்கான சட்டங்கள் கடந்த ஆண்டு இதே காலத்தில் நிறைவேற்றப்பட்டன. அவற்றுக்கு மத்திய அரசின் ஒப்புதல் பெறப்படும் என்று தமிழக அரசு ஓராண்டாக கூறி வரும் போதிலும், அதில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. கடந்த ஆண்டு மருத்துவ மாணவர் சேர்க்கை முடிவதற்கு சில நாட்கள் வரை நீட் தேர்வுக்கு விலக்கு பெற போராடிக் கொண்டிருப்பதாக கூறி வந்த தமிழக அரசு கடைசி நேரத்தில் கை விட்டதால்தான் மாணவி அனிதாவை நாம் இழந்தோம்.

அதன்பிறகும் வரும் ஆண்டில் நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு பெற நடவடிக்கை எடுக்கப்படும் என்று நம்பிக்கை அளித்து வந்த அதிமுக அரசு, தேர்வுக்கு இன்னும் 3 மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில் நீட் தேர்வை தடுக்க முடியாது என்று இப்போது அறிவித்துள்ளது. இதன் மூலம் நீட் தேர்வுக்கு விலக்கு பெறும் விஷயத்தில் தோல்வி அடைந்துவிட்டதை தமிழக அரசு ஒப்புக் கொண்டிருக்கிறது. நீட் தேர்விலிருந்து விலக்கு பெற தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்ததாகவும், அவற்றில் முன்னேற்றம் ஏற்பட்ட நிலையில் திடீரென பின்னடைவு ஏற்பட்டு விட்டதாகவும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். இவை அனைத்தும் மக்களை ஏமாற்றுவதற்காக கட்டவிழ்த்து விடும் கட்டுக்கதைகள் ஆகும். நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்களிக்க முடியாது என கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகு, இந்த விஷயத்தில், தமிழக மாணவர்களுக்கு சமூக நீதி கிடைக்க தமிழக அரசு துரும்பைக் கூட கிள்ளிப் போடவில்லை என்பதுதான் உண்மையாகும்.

நீட் தேர்வு தமிழகத்திற்கு வருவதை தடுக்கவே முடியாது என்று தமிழக அரசு கூறுவதை ஏற்கமுடியாது. இரு வழிகளில் நீட் தேர்வுக்கு விலக்கு பெற முடியும். அவற்றில் முதலாவது பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு அரசியல் அழுத்தம் கொடுத்து நீட் தேர்விலிருந்து விலக்கு கோரி தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்டத்திற்கு மத்திய அரசின் ஒப்புதலை பெறுவது ஆகும். ஆனால், மத்திய அரசிடம் பணிந்து கிடக்கும் தமிழக ஆட்சியாளர்கள் இந்த விஷயத்தில் மத்திய அரசுக்கு சிறிய அளவிலான அழுத்தம் கூட தருவதற்கு தயாராக இல்லை என்பதுதான் கொடுமையாகும்.

இரண்டாவது, நீட் தேர்வு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடித்து சட்டபூர்வமாக நீதி பெறுவது ஆகும். இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்றால் நீட் தேர்வு செல்லும் என்று உச்ச நீதிமன்றம் இன்று வரை தீர்ப்பளிக்கவில்லை என்பதுதான். 2010-ம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டு 2012-ம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படவிருந்த நீட் தேர்வை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், அனைவருக்கும் பொதுவான நீட் தேர்வு செல்லாது என்று 2013-ம் ஆண்டில் அப்போதைய உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி அல்தாமஸ் கபீர் தலைமையிலான அமர்வு தீர்ப்பளித்தது. அதனால், நீட் தேர்வுகள் முற்றிலுமாக ரத்து செய்யப்பட்டன. அந்த தீர்ப்பை எதிர்த்து செய்யப்பட்ட சீராய்வு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், 2013-ம் ஆண்டில் வழங்கப்பட்ட தீர்ப்பை திரும்பப் பெற்று அந்த வழக்கை மீண்டும் விசாரிப்பதாக அறிவித்ததன் அடிப்படையில்தான் இப்போது நீட் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இன்று வரை நீட் தேர்வுக்கு சட்டபூர்வ அங்கீகாரம் வழங்கப்படவில்லை.

தமிழ்நாட்டில் மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளுக்கு நடத்தப்பட்டு வந்த நுழைவுத்தேர்வுகளை ரத்து செய்து 2006-ம் ஆண்டில் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்டம் செல்லும் என உச்ச நீதிமன்றமே தீர்ப்பளித்துள்ளது. இதனால் நீட் தேர்வு குறித்த முதன்மை வழக்கில் நுழைவுத்தேர்வு குறித்த தமிழகத்தின் வரலாறு மற்றும் சட்டத்தை எடுத்துக்கூறி எளிதாக விலக்கு பெறலாம். ஆனால், அதற்கான முயற்சிகளை செய்யாமல் நீட்டை தடுக்க முடியாது என அரசு கூறுவது கண்டிக்கத்தக்கது.

நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக அரசு இனியும் அலட்சியம் காட்டாமல் சட்ட வல்லுனர்களுடன் ஆலோசனை நடத்தி மத்திய அரசிடமிருந்தோ, உச்ச நீதிமன்றத்திடமிருந்தோ நீட் தேர்வுக்கு விலக்கு பெற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதை செய்ய தமிழக அரசால் முடியா விட்டால், நீட் தேர்வு விவகாரத்தில் தோல்வியை ஒப்புக்கொண்டு அதிமுக அரசு உடனடியாக பதவி விலக வேண்டும்'' என்று அன்புமணி கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x