Published : 25 Feb 2018 12:17 PM
Last Updated : 25 Feb 2018 12:17 PM

நடிப்பில் பன்முகத்தன்மை கொண்டவர் ஸ்ரீதேவி: முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்

சிறுவயதில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான ஸ்ரீதேவி நடிப்பில் பன்முகத்தன்மை கொண்டவர் அவரது இழப்பு இந்திய சினிமாவுக்கு பேரிழப்பு என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது இரங்கலில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து முதல்வர் எடப்பாடி வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கை:

“புகழ்பெற்ற திரைப்பட நடிகை ஸ்ரீதேவி நேற்று இரவு துபாயில் மாரடைப்பால் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த துயரம் அடைந்தேன்.

திரைப்பட நடிகை ஸ்ரீதேவி சிறு வயதிலேயே குழந்தை நட்சத்திரமாக திரைத்துறையில் அடியெடுத்து வைத்து, பின்னர் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிப் படங்களில் நடித்த பெருமைக்குரியவர். நடிப்பில் பன்முகத்தன்மை கொண்டவர். இவர் தமிழில் நடித்த 16 வயதினிலே, மூன்றாம் பிறை, சிவப்பு ரோஜாக்கள், பிரியா, வறுமையின் நிறம் சிவப்பு போன்ற திரைப்படங்கள் இவரின் நடிப்புத் திறமைக்கு சான்றாகும்.

ஸ்ரீதேவி அவர்கள் தனது நடிப்புத் திறமைக்காக பத்மஸ்ரீ விருது, பிலிம்பேர் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்ற பெருமைக்குரியவர் ஆவார். அனைவரிடமும் அன்பாக பழகக்கூடியவரும், சுமார் 50 ஆண்டுகாலமாக திரைத்துறையில் தனக்கென தனி முத்திரை பதித்தவருமான நடிகை

ஸ்ரீதேவி அவர்களின் மறைவு தமிழ் திரையுலகிற்கு மட்டுமின்றி இந்திய திரையுலகிற்கே ஒரு பேரிழப்பாகும்.

ஸ்ரீதேவி அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், திரையுலக நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அவரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.”

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x