

விருதுநகர் பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து - 10 பேர் உயிரிழப்பு: விருதுநகர் மாவட்டம் ஆலங்குளம் அருகே பட்டாசு ஆலையில் சனிக்கிழமை பிற்பகல் ஏற்பட்ட வெடி விபத்தில் 4 பெண்கள் உள்பட 10 பேர் உயிரிழந்தனர். 8 பேர் காயமடைந்தனர். பேன்ஸி ரக பட்டாசுகளுக்கு மருந்து வைக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தபோது, உராய்வு ஏற்பட்டு திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இதில், அந்த அறை முழுவதும் இடிந்து விழுந்தது. இது தொடர்பாக போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே, விருதுநகர் பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்த 10 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்க தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளர்.
சிறுபான்மையின மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை: ஒன்றாம் முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் சிறுபான்மையின மாணவ, மாணவியருக்கு ஒன்றிய அரசு நிறுத்திய கல்வி உதவித் தொகையினை இனி தமிழ்நாடு அரசு நிதி உதவியுடன் வக்ஃப் வாரியம் மூலம் வழங்கப்படும். இதன் மூலம் 1 லட்சத்து 26 ஆயிரத்து 256 முஸ்லிம் மாணவியர்கள் பயன் பெறுவார்கள் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
பஞ்சு மிட்டாய் தடை - அரசின் உத்தரவும் விளக்கமும்:நச்சு வேதிப்பொருள் உள்ள செயற்கை நிறமூட்டியை கலந்த பஞ்சு மிட்டாய் விற்பனைக்கு தடை விதித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளளது.
இது தொடர்பாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் விடுத்துள்ள அறிக்கையில், “பஞ்சு மிட்டாய் மற்றும் நிறமூட்டப்பட்ட மிட்டாய் வகைகளை அரசு உணவு பகுப்பாய்வு கூடத்தில் ஆய்வு செய்ததில் ரொடமைன் பி (Rhodamine-B)எனப்படும் செயற்கை நிறமூட்டி வேதிப்பொருள் கலந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் 2006 பிரிவின்படி, தரம் குறைவான மற்றும் பாதுகாப்பற்ற உணவு என உறுதி செய்யப்பட்டுள்ளது.
எனவே, உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் 2006 பிரிவின்படி, ரொடமைன் பி எனப்படும் செயற்கை நிறமூட்டியைக் கொண்டு உணவு பொருட்கள் தயாரித்தல், பொட்டலமிடுதல், இறக்குமதி செய்தல், விற்பனை செய்தல், திருமண விழாக்கள் மற்றும் பொது நிகழ்வுகள் ஆகியவற்றில் பரிமாறுதல் ஆகியவை தண்டனைக்குரிய குற்றமாகும். மேலும் இதுகுறித்து ஆய்வு செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க, உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, சென்னையில் உணவு பாதுகாப்புத் துறை சார்பில் மெரினா கடற்கரையில் கடந்த பிப்ரவரி 8-ம் தேதி ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது வண்ணங்கள் அதிகம் சேர்க்கப்பட்ட ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள 1,000-க்கும் மேற்பட்ட பஞ்சுமிட்டாய் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதை உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆய்வுக்கு அனுப்பி இருந்தனர். ஆய்வு முடிவில் பறிமுதல் செய்யப்பட்ட பஞ்சு மிட்டாய்களில் ரோடமைன் பி (Rhodamine B) என்ற நச்சுப்பொருள் கலந்திருப்பது தெரியவந்தது குறிப்பிடத்தக்கது.
வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது இன்சாட்-3டிஎஸ்: ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஜிஎஸ்எல்வி-எஃப்14 ராக்கெட் மூலம் இன்சாட்-3டிஎஸ் செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. வானிலை மாற்றத்தை துல்லியமாக ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்டுள்ள இந்த செயற்கைகோளானது புவி வட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையத்துக்கு சொந்தமான இந்த செயற்கைக்கோள் 2,275 கிலோ எடை கொண்டது. இதில் உள்ள 6 சேனல் இமேஜர் உள்ளிட்ட 25 விதமான ஆய்வு கருவிகள், பூமியின் பருவநிலை மாறுபாடுகளை உன்னிப்பாக கண்காணித்து, வானிலை தகவல்களை வழங்கும். இந்த செயற்கைக்கோள் மூலம் புயல் எப்போது கரையைக் கடக்கும் என்பதை 2 நாட்களுக்கு முன்பே கண்டறிய முடியும். அதேபோல புயல் கரையை கடக்கும் இடத்தை சுமார் 20 கிலோ மீட்டர் துல்லியத்தில் கண்டறிய முடியும். மேலும், பேரிடர் காலங்களில் காற்றில் ஏற்படும் மாற்றங்கள், புயலின் மாற்றங்களை துல்லியமாக அறிய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்களவைத் தேர்தல் பரப்புரையை தொடங்கியது திமுக: மக்களவைத் தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், திமுக பரப்புரையைத் தொடங்கியிருப்பதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் “மக்களவைத் தேர்தல் பரப்புரையைத் தொடங்கியது திமுக. தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்டெடுக்க இந்தியாவின் தென் முனையில் ஒலிக்கத் தொடங்கியிருக்கும் இந்தக் குரல், வடக்கிலும் எதிரொலிக்கும், இந்தியாவின் பெருமைகளை மீட்டெடுக்கும். பாசிசம் வீழும். #INDIA வெல்லும்” என முதல்வர் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
வங்கிக் கணக்குகள் முடக்கம்: பிப்.19-ல் தமிழக காங். ஆர்ப்பாட்டம்: “மத்திய பாஜக அரசு வருமான வரித் துறை மூலம் காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கை முடக்கியதை கண்டிக்கிற வகையில் அனைத்து மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகளும் எங்கெங்கு வருமான வரித் துறை அலுவலகங்கள் இருக்கிறதோ, அந்த அலுவலகத்துக்கு முன்பாக வருகிற பிப்ரவரி 19-ஆம் தேதி திங்கட்கிழமை காலை கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும் அகில இந்திய காங்கிரஸ் அறிவுறுத்தியுள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
சுப்ரியா சுலேவுக்கு எதிராக சுனேத்ரா: அஜித் பவார் வியூகம்: தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவரும் மகாராஷ்டிராவின் துணை முதல்வருமான அஜித் பவார், இந்த முறை புதியவர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்று பாராமதி தொகுதி வாக்காளர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். யாருடைய பெயரையும் குறிப்பிடாமல் அவர் பேசியிருந்தாலும் அவரது பேச்சு வரும் மக்களவைத் தேர்தலில் பாராமதியில் சுப்ரியா சுலேவுக்கு எதிராக தனது மனைவியை அவர் நிறுத்தலாம் என்ற ஊகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே, மகாராஷ்டிராவின் பாராமதி மக்களவைத் தொகுதியில் சுப்ரியா சுலேவுக்கு எதிராக தனது மனைவி சுனேத்ராவை நிறுத்தும் அஜித் பவாரின் வியூகம் குறித்து கருத்து தெரிவித்துள்ள சரத் பவார், "தொகுதி மக்களின் உணர்வுகளை சோதிக்க முயற்சிக்கிறார்" என்று கூறியுள்ளார்.
நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆம் ஆத்மி அரசு வெற்றி!: டெல்லி சட்டப்பேரவையில் சனிக்கிழமை நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் அரவிந்த் கேஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி அரசு வெற்றி பெற்றுள்ளது. அரசுக்கு ஆதரவாக 54 எம்எல்ஏக்கள் வாக்களித்தனர். இது குறித்து அரவிந்த் கேஜ்ரிவால் கூறுகையில், “ஆம் ஆத்மி கட்சியில் இருந்து யாரும் விலகவில்லை. இரண்டு எம்எல்ஏக்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சிலருக்கு உடல்நிலை சரியில்லை, சிலர் வெளியூரில் உள்ளனர்" என்றார்.
மேலும், “எதிர்வரும் தேர்தலில் இயலாமல் போனாலும் கூட, 2029 மக்களவைத் தேர்தலில், நாட்டை பாஜகவிடம் இருந்து ஆம் ஆத்மி விடுவிக்கும்” என்று அவர் கூறினார்.
இந்தியா 322 ரன்கள் முன்னிலை: இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்டில் 3-ம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி இரண்டு விக்கெட் இழப்புக்கு 196 ரன்கள் எடுத்துள்ளது. இதன்மூலம் இந்திய அணி 322 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. அதிரடியாக ஆடிய ஜெய்ஸ்வால் இந்த தொடரில் தனது இரண்டாவது சதத்தை பதிவு செய்தார். 104 ரன்கள் எடுத்திருந்த காயம் காரணமாக பாதியில் வெளியேறினார். கில் அரைசதத்தை பதிவு செய்தார்.
அலெக்ஸி நவல்னி மரணம்: புதினுக்கு எச்சரிக்கை: ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னி சிறையில் மரணமடைந்தது உறுதி செய்யப்பட்டால் விளாடிமிர் புதினும் அவரது கூட்டாளிகளும் தண்டிக்கப்படாமல் போக மாட்டார்கள் என்று அலெக்ஸியின் மனைவி தெரிவித்துள்ளார். மேலும் அவர், "ஒருவேளை அந்தச் செய்தி உண்மையாக இருக்கும் பட்சத்தில் புதின், அவரது குடும்பத்தினர், அவரது நண்பர்கள், அவரது அரசாங்கம் எனது கணவருக்கு செய்த அனைத்துக்கும் பொறுப்பேற்க வேண்டும் என்பதை அவர்கள் அறிய வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அந்த நாள் விரைவில் வரும்" என்று தெரிவித்துள்ளார்.