

மேட்டூர்: கர்நாடகாவில் குரங்கு காய்ச்சல் பரவலையடுத்து, தமிழக - கர்நாடக எல்லையில் சுகாதாரத்துறையினர் முகாம் அமைத்து மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டனர்.
கர்நாடக மாநிலம் ஷிமோகா, உத்திரகனடா, சிக்மங்களூரு ஆகிய மாவட்டங்களில் 53 பேருக்கு அண்மையில் குரங்கு காய்ச்சல் நோய் பாதிப்பு கண்டறியப்பட்டது.
இந்நிலையில், தமிழக - கர்நாடக எல்லையான பாலாறு வனப்பகுதி வழியாக தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தமிழக எல்லையான கொளத்தூரை அடுத்த காரைக்காடு சோதனைச் சாவடியில் சிறப்பு மருத்துவ முகாம் நேற்று நடந்தது.
கர்நாடகாவில் இருந்து வரும் பயணிகளிடம் காய்ச்சல் பாதிப்பு உள்ளதா? என கொளத்தூர் வட்டார மருத்துவ அலுவலர் விமலா தலைமையிலான குழுவினர் பரிசோதனை மேற்கொண்டனர்.
இதுகுறித்து, மருத்துவ அலுவலர் விமலா கூறியதாவது: கர்நாடகாவில் இருந்து வரும் பயணிகளுக்கு காய்ச்சல், சளி, இருமல் பாதிப்பு உள்ளதா என பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பாதிப்புள்ள வர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கொளத்தூர் சுற்று வட்டாரப் பகுதியில் இருந்து அதிக மக்கள் கர்நாடகாவுக்கு சென்று வருகின்றனர். இந்த பகுதியில் உள்ள மக்களுக்கு காய்ச்சல், சளி உள்ளிட்ட பாதிப்புகள் இருந்தால் உடனடியாக மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அனைத்துத் துறை அலுவலர்களை கொண்டு குழு அமைத்தும், ஊராட்சித் தலைவர்கள் மூலமாகவும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. நடமாடும் மருத்துவக் குழு மூலமாக தினமும் மருத்துவப் பரிசோதனை முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
மேலும், கர்நாடக மாநிலத்தில் இருந்து வருபவர்கள் குறித்தும், அவர்களுக்கு காய்ச்சல் பாதிப்பு இருந்தால் உடனடியாக சுகாதாரத் துறை அதிகாரிகளை தொடர்பு கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது, என்றார்.
அனைத்துத் துறை அலுவலர்களை கொண்டு குழு அமைத்தும், ஊராட்சித் தலைவர்கள் மூலமாகவும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.