

சென்னை: சட்டத்துக்கு எதிராக நிதி பெற்ற பாஜகவின் வங்கிக் கணக்கு ஏன்முடக்கப்படவில்லை? என்று அகில இந்திய காங்கிரஸ் தொழில் வல்லுநர்கள் பிரிவு தலைவர் பிரவீன் சக்கரவர்த்தி கேள்வி எழுப்பி உள்ளார்.
அகில இந்திய காங்கிரஸின் வங்கிக் கணக்கை வருமானவரித் துறை முடக்கியது தொடர்பாக அகில இந்திய காங்கிரஸ் தொழில் வல்லுநர்கள் பிரிவின் தலைவர் பிரவீன் சக்கரவர்த்தி சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
பிரதமர் நரேந்திர மோடி அரசால்தொடங்கப்பட்ட தேர்தல் நன்கொடை பத்திரம் திட்டம் அரசியலமைப்புக்கு எதிரானது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. முகம்தெரியாத அனாமதேய நபர்களிடமிருந்து தேர்தல் நன்கொடை பத்திரம்மூலம் இந்திய மக்களை மோடி அரசு ஏமாற்ற முயல்கிறது என்பதை அந்தத் தீர்ப்பு மறைமுகமாக உணர்த்தியது.
பத்திரத் திட்டத்தின் மூலம் பெருநிறுவனங்களிடமிருந்து ரூ.6,565 கோடியை பாஜக பெற்றுள்ளது. யார் இந்த பெருநிறுவனங்கள்? இந்த நிதிக்கு ஈடாக அவர்களுக்கு என்ன பிரதிபலன் கிடைத்தது? அது யாருடைய பணம்? இந்தக் கேள்விக்கான பதில் இந்திய மக்களுக்குத் தெரியவில்லை.
காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்குகளை முடக்கினர். உச்ச நீதிமன்றமே அரசியல் சட்டத்துக்கு எதிரான நிதி என்று கூறிய பிறகும் பாஜகவின் வங்கிக் கணக்கு ஏன் முடக்கப்படவில்லை?
உடனடியாக நிவாரணம் கேட்டு காங்கிரஸ் கட்சி வருமானவரித் துறை மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தை அணுகியது. அதனால் காங்கிரஸ் வங்கி கணக்கை இயக்க அனுமதிக்குமாறு மோடி அரசுக்கு தீர்ப்பாயம் உத்தரவிட்டது. காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமல்ல, நாட்டுக்கே இப்போது நம்பிக்கை தருவது இந்தியாவின் நீதித் துறைதான். இவ்வாறு அவர் கூறினார்.