

திருவண்ணாமலை: மேல்மா சிப்காட் விவகாரத்தில் அமைச்சர் எ.வ.வேலுவின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே சிப்காட் விரிவாக்கத்துக்காக மேல்மா உள்ளிட்ட 9 ஊராட்சிகளில் 3,200 ஏக்கர் விவசாய நிலங்களை கையகப்படுத்தும் முயற்சியை எதிர்த்து,விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, 7 விவசாயிகள் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். இதற்கு அரசியல் கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்ததால், குண்டர் சட்டத்திலிருந்து அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
இந்நிலையில், சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில், விவசாயிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்தது கண்டிக்கத்தக்கது என்று எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி தெரிவித்தார். அதற்கு பதில் அளித்த பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு, “9 கிராமங்களில், 7 கிராமங்களைச் சேர்ந்தவிவசாயிகள் நிலம் கொடுக்க முன்வந்துள்ளனர். இரு கிராம மக்கள் மட்டும், சிலரின் தூண்டுதலின் பேரில் செயல்படுகின்றனர். கைது செய்யப்பட்டவர்கள் யாரும் நிலத்துக்கு சொந்தக்காரர்கள் இல்லை” என்றார்.
நிலத்தில் இறங்கி... அமைச்சரின் இந்த கருத்துக்கு மேல்மா சிப்காட் விரிவாக்க எதிர்ப்பு இயக்கத்தினர் மற்றும் விவசாயிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும், செய்யாறு அடுத்த குறும்பூர் கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தில் இறங்கிநேற்று முன்தினம் இரவு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் அமைச்சர் எ.வ.வேலுவை கண்டித்து முழக்கமிட்டனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது, “நிலம் கொடுக்க மறுத்துப் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்து, கொடுமைப்படுத்தினர். போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளுக்கு ஒரு சென்ட் நிலம்கூட இல்லை எனஅமைச்சர் எ.வ.வேலு கூறி வருகிறார். எங்களுக்கு விவசாய நிலம் உள்ளது. இதை நிரூபித்தால், அமைச்சர் பதவியில் இருந்து எ.வ.வேலு விலகத் தயாரா?” என்றனர்.