Published : 17 Feb 2024 06:10 AM
Last Updated : 17 Feb 2024 06:10 AM
சென்னை: புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதியத்தை அமல்படுத்த வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கும் முயற்சியைக் கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தெற்கு ரயில்வே தொழிலாளர் சங்கத்தினர் (எஸ்ஆர்எம்யு) சென்னையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சென்னை தெற்கு ரயில்வே பொதுமேலாளர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் எஸ்ஆர்எம்யு பொதுச் செயலாளர் என்.கண்ணையா பேசியதாவது: மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ரயில்வே ஊழியர்களுக்கு கடந்த 2004 ஏப்.1-ம் தேதிமுதல் புதிய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்பட்டது.
திட்டம் தொடங்கி 19 ஆண்டுகளாகியும், தாங்கள் பெறப்போகும் ஓய்வூதியத் தொகை என்னவென்று தெரியாமலேயே ஊழியர்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
எனவே, உத்தரவாதத்துடன் கூடிய ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் வழங்கும் வகையில் இந்த திட்டத்தை மாற்ற வேண்டும். மேலும், பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
கட்டமைப்பு வசதிகள்: முதலில் 8 வந்தே பாரத் ரயில்களை இயக்கி வந்த ரயில்வே நிர்வாகம், தற்போது அனைத்து வழித்தடங்களிலும் வந்தே பாரத் ரயில்களை இயக்க முடிவு செய்துள்ளது. ஆனால், அதற்கேற்ப கட்டுமான வசதிகளை மேம்படுத்தவில்லை. தேவையான பணியாட்களையும் நியமிக்கவில்லை.
இதேபோல, சரக்கு ரயில்களை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், தேவையான கட்டுமான வசதிகளை ஏற்படுத்தவோ, ஊழியர்களின் எண்ணிக்கையோ அதிகப்படுத்தவோ நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், ரயில்களின் பராமரிப்பு கேள்விக்குறியாகி, பயணிகளுக்கு பயத்தை ஏற்படுத்தும் சூழல்நிலை உருவாகிறது.
தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்: மத்திய அரசின் தனியார்மயக் கொள்கை காரணமாக ரயில்வேயில் 13.5 லட்சம் ஊழியர்கள் பாதிக்கப்படுவார்கள். வடமேற்கு ரயில்வேயில் 56 ரயில்களும், தெற்கு ரயில்வேயில் 6 ரயில்களும் பாரத் கவுரவ் ரயில்கள் என சிறப்பு ரயில்களாக இயக்கப்பட்டு வருகின்றன.
ஆரம்பத்தில் சிறப்பு ரயில்கள் என்று இயக்கினாலும், அவற்றின் கூடுதல் கட்டணத்துக்கு பயணிகள் பழகிய பின்னர், அவற்றை முற்றிலுமாக தனியாரிடம் ஒப்படைக்கத் திட்டமிட்டுள்ளனர்.
பிற மாநிலங்களில் இருந்து வந்துள்ள ஊழியர்கள், தெற்கு ரயில்வேயில் அதிகம் பணிபுரிகின்றனர். பிராந்திய மொழி தெரியாதவர்களை பணியில் அமர்த்துவது, மக்களுக்கு இடைஞ்சலாக உள்ளது. எனவே, முன்புபோல ரயில்வே தேர்வு வாரியம் மூலம், பிராந்திய அளவிலான பணி நியமனத்துக்கு தேர்வு நடத்த வேண்டும்.
இதன்மூலம், அந்தந்தப் பகுதியில் உள்ள இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இவ்வாறு கண்ணையா கூறினார். ஆர்ப்பாட்டத்தில், எஸ்ஆர்எம்யு தலைவர் ராஜா தர் மற்றும் ஏராளமான ஊழியர்கள் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT