

சென்னை: மத்திய பாஜக அரசுக்கு எதிராகநாடு தழுவிய அளவில் நேற்றுநடைபெற்ற பொதுவேலை நிறுத்தத்தின் ஒருபகுதியாக சென்னையில் தலைமை தபால் நிலைய முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. இதில் ஈடுபட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை போலீஸார் கைது செய்தனர்.
விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும், புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும், விவசாயிகளுக்குக் கொடுத்தவாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய தொழிற்சங்கங்கள், ஐக்கிய விவசாயிகள் அமைப்பு(எஸ்கேஎம்) உள்ளிட்டவை பிப்.16-ம்தேதி பொது வேலைநிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்திருந்தன.
அதன்படி, தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் மத்திய அரசு அலுவலகங்கள் அருகே மறியல், ஆர்ப்பாட்டம் போன்றவற்றை தொழிற்சங்கங்கள் நேற்று முன்னெடுத்தன. அந்த வகையில், சென்னை, அண்ணா சாலையில் உள்ள தலைமை தபால் நிலைய முற்றுகைப் போராட்டம் தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் நடைபெற்றது.
இதற்காக அண்ணா சாலை தாராபூர் டவர் அருகே காலை9.30 மணி முதல் அனைத்து தொழிற்சங்கங்களின் உறுப்பினர்களும் குவியத் தொடங்கினர். அவர்கள்மத்திய பாஜக அரசுக்கு எதிராகபதாகைகளை ஏந்தியும், கண்டன முழக்கங்களை எழுப்பியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து,தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிட முயன்றனர்.
அப்போது தடுப்புகள் அமைத்து போலீஸார் அவர்களைத் தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதனால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் போலீஸாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் சிலருக்கு காயம் ஏற்பட்டது. தொடர்ந்து போலீஸ் வாகனங்களில் ஏற மறுத்து, தரையில் அமர்ந்து தொழிற்சங்கத்தினர் தர்ணாவில் ஈடுபட்டனர்.
பின்னர் அவர்களைச் சமாதானம்செய்து, காவல் துறை வாகனங்களில் ஏற்றி அண்ணா அரங்கத்துக்கு போலீஸார் அனுப்பி வைத்தனர். சிலமணி நேரங்களில் கைதானவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
முன்னதாக செய்தியாளர்களிடம் தொமுச பொதுச் செயலாளர் மு.சண்முகம், எம்.பி. கூறியதாவது: மத்திய பாஜக அரசு நாட்டை சீரழித்துள்ளது. வெள்ளை அறிக்கை என்ற பெயரில் நாடாளுமன்றத்தில் பொய்யான அறிக்கையை சமர்ப்பித்து ஏமாற்றுகிறது. பாஜக அரசை விரட்டும் நோக்கத்தோடு இந்த போராட்டத்தை நடத்துகிறோம்.
டெல்லியில் விவசாயிகள் நடத்தும் மாபெரும் போராட்டத்தை ஒடுக்க பாஜக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதையும்கண்டித்து இந்த போராட்டம் நடைபெறுகிறது. வரும் மக்களவைத் தேர்தலில் மத்திய பாஜகஅரசை வீழ்த்துவோம். இவ்வாறு அவர் கூறினார்.
இப்போராட்டத்தில் கி.நடராஜன் (தொமுச), ஜி.சுகுமாறன் (சிஐடியு), ராதாகிருஷ்ணன் (ஏஐடியுசி), ராஜாஸ்ரீதர் (எச்எம்எஸ்), அந்திரிதாஸ் (எம்எல்எஃப்), சேவியர் (ஐஎன்டியுசி), கே.பாலகிருஷ்ணன் (எஸ்கேஎம்) உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர். அண்ணா தொழிற்சங்கம் கருத்து
இதற்கிடையே தொழிற் சங்கங்களின் போராட்டம் தொடர்பாக அண்ணா தொழிற்சங்க பேரவைச் செயலாளர் ஆர்.கமலக்கண்ணன்கூறியதாவது: மத்திய அரசுக்கு எதிராக கண் துடைப்புக்காக தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்தை அறிவித்துள்ளன. தமிழக அரசும் பல்வேறுகோரிக்கைகளை நிறைவேற்றவில்லை. எனவே மாநில அரசையும் எதிர்க்க வேண்டும் என்ற நோக்கில் தமிழகத்தைப் பொறுத்தவரை முழுமையான அளவில் அண்ணா தொழிற்சங்க உறுப்பினர்கள் பணியைப் புறக்கணித்துள்ளனர்.
குறிப்பாக கோவை மின்வாரியத்தில் 29 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் பணிக்குச் செல்லவில்லை. ஆனால் பிற சங்கத்தினரோ மறியல் போராட்டத்தை நடத்தி, பிற்பகலில் பணிக்குச் சென்றுள்ளனர். அனைத்து பேருந்துகளும் இயக்கப்பட்டு, அலுவலகங்கள் முறையாக இயங்கியது தொடர்பான தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. இவ்வாறு அவர் கூறினார்.