Published : 16 Feb 2024 05:02 PM
Last Updated : 16 Feb 2024 05:02 PM

“தேர்தல் பத்திரம் திட்டம் ரத்தால் பாஜகவுக்கு இழப்பு இல்லை” - திமுகவுடன் ஒப்பிட்டு அண்ணாமலை பதில்

சென்னை: "பாஜக இந்தியா முழுவதும் இருக்கிற ஒரு கட்சி. ஆனால், தமிழகத்தில் மட்டுமே இருக்கக் கூடிய திமுகவுக்கு ரூ.600 கோடிக்கு தேர்தல் பத்திரங்கள் மூலம் நிதி வந்துள்ளது. பாஜகவுக்கு ஒரு மாநிலத்துக்கு சராசரியாக ரூ.212 கோடி தேர்தல் பத்திரம் மூலம் நிதி வந்துள்ளது. எனவே, இந்தத் திட்டத்தை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துவிட்டதால் பாஜகவுக்கு எந்த இழப்பும் இல்லை" என்று அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

சென்னையில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வெள்ளிக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: "பிரதமர் தமிழகம் வருவதற்கு முன்பாக, என் மண் என் மக்கள் யாத்திரை 234 தொகுதிகளிலும் முடித்திருப்போம். சென்னையில் காவல் துறை அனுமதி இல்லை. எனவே, இங்குள்ள 20 தொகுதிகளில் மட்டும் மக்களை உள் அரங்கு கூட்டங்களில் சந்தித்து வருகிறோம். இந்த யாத்திரையின் இறுதி நிகழ்வு பல்லடத்தில் நடைபெறுவது உறுதி.

என் மண் என் மக்கள் யாத்திரையின் இறுதி நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பிரதமர் பல்லடத்துக்குத்தான் வருகிறார். அதில் எந்த மாற்றமும், சந்தேகமும் இல்லை. ஆனால், எந்த தேதியில் வருகிறார் என்பதை இரண்டு, மூன்று நாட்களில் அறிவிக்கிறோம். காரணம், பிரதமர் அரசு நிகழ்ச்சியிலும் பங்கேற்பதற்கான வாய்ப்பு இருக்கும்போது, அந்த தேதியையும் இறுதி செய்த பின்னர்தான், தேதியை அவர்கள் அறிவிப்பார்கள்" என்றார்.

அப்போது நடிகை கவுதமி அதிமுகவில் இணைந்தது குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், "தேர்தல் நேரத்தில் சிலர் அந்தக் கட்சியில் இணைவார்கள். சிலர் இந்த கட்சியில் இணைவார்கள். இது புதிதல்ல. கவுதமி ராஜபாளையத்தில் போட்டியிட கட்சி வாய்ப்பு தருவதாக கூறியிருந்ததாகவும், ஆனால், வாய்ப்பு தரவில்லை என்று சொல்லியிருந்தார். இன்று அவர் அதிமுகவில் இணைந்துள்ளார். சில விஷயங்களை வெளிப்படையாக வெளியே பேசுவது நல்லதல்ல.

பிரதமரின் தமிழக வருகையின்போது இன்னும் நிறைய பேர் பாஜகவில் இணையப் போகின்றனர். பாஜகவில் இருந்து மாற்றுக் கட்சிக்கு செல்பவர்களுக்கு எனது வாழ்த்துகள். அதேபோல், பிற கட்சிகளில் இருந்து பாஜகவில் இணைந்தால், அவர்களுடைய பழைய கட்சியைக் குறித்து யாரும் பேச வேண்டும் என்று கட்சியினரிடம் நான் கூறியிருக்கிறேன். எனவே, மக்கள் வருவதும் போவதும் சகஜம்தான்" என்றார்.

தேர்தல் பத்திரம் திட்டத்தை ரத்து செய்த உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், "தேர்தல் பத்திரம் திட்டத்தின் மூலம் பாஜகவுக்கு வரக்கூடிய பணம் 52 சதவீதம்தான். திமுகவுக்கு 91 சதவீதம் வருகிறது. பாஜகவுக்கு வந்துள்ள 48 சதவீத தொகை தேர்தல் பத்திரம் இல்லாமல் வந்துள்ளது. இந்தியாவில் பாஜக மீது மக்கள் மதிப்பும் மரியாதையும் வைத்து, இந்தக் கட்சிக்கு 10 ரூபாய் கொடுத்தால், அவர்கள் சரியாக பயன்படுத்துவார்கள் என்ற நம்பிக்கையில் கொடுத்துள்ளனர்.

பாஜக இந்தியா முழுவதும் இருக்கிறது. ஆனால், தமிழகத்தில் மட்டுமே இருக்கக்கூடிய திமுகவுக்கு ரூ.600 கோடிக்கு தேர்தல் பத்திரங்கள் மூலம் நிதி வந்துள்ளது. பாஜகவுக்கு ஒரு மாநிலத்துக்கு சராசரியாக ரூ.212 கோடி தேர்தல் பத்திரம் மூலம் நிதி வந்துள்ளது. எனவே, இந்தத் திட்டத்தை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துவிட்டதால் பாஜகவுக்கு எந்த இழப்பும் இல்லை.

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர்கள் 5,500 பேருக்கும் காசோலையில் நிதி வழங்கினோம். இதுபோல் செய்ததாக திமுகவோ, வேறு ஏதாவது மூத்த கட்சிகளோ, இல்லை தமிழகத்தில் உள்ள ஏதாவது ஒரு கட்சி சொல்ல முடியுமா? எனவே, எங்களைப் பொறுத்தவரை இந்த தீர்ப்பால் இழப்பு ஒன்றும் இல்லை" என்று அண்ணாமலை கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x