“எனது கேள்விக்கு முதல்வர் உரையில் பதில் இல்லை” - எதிர்க்கட்சித் தலைவர் இபிஎஸ் குற்றச்சாட்டு

“எனது கேள்விக்கு முதல்வர் உரையில் பதில் இல்லை” - எதிர்க்கட்சித் தலைவர் இபிஎஸ் குற்றச்சாட்டு
Updated on
1 min read

சென்னை: திமுக ஆட்சியில் கொண்டு வந்த புதிய திட்டங்கள் என்ன என்பது உள்ளிட்ட எனது கேள்விகளுக்கு முதல்வர் உரையில் எந்த பதிலும் இல்லை என எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி தெரிவித்தார்.

இதுதொடர்பாக சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் நேற்று அவர் கூறியதாவது: ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் அதிமுக சார்பில் பல்வேறு கருத்துகளை தெரிவித்திருந்தேன். அவற்றுக்கு முதல்வரின் உரையில் எந்த பதிலும் கிடைக்கவில்லை. நான் முதல்வராக இருந்த காலத்தில் ஒரு ஆரம்ப சுகாதார நிலையம் கூட திறக்கப்படவில்லை என பேரவையில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் குற்றம்சாட்டியிருந்தார்.

இதையடுத்து, எந்தெந்த தேதியில் அரசாணை வெளியிடப்பட்டது, எத்தனை ஆரம்ப சுகாதார நிலையம் புதிதாக தொடங்கப்பட்டது என்பதை ஆதாரத்துடன் சட்டப்பேரவையில் நான் தெரிவித்தேன்.

அதேநேரம், திமுக அரசு அமைந்து 33 மாதங்களில் அமைக்கப்பட்ட குழுக்கள், அவற்றின் அறிக்கைகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விவரம், உலக முதலீட்டாளர் மாநாட்டில் தொழில் தொடங்க விருப்பம் தெரிவித்த நிறுவனங்களின் பட்டியல், உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தில் முழுமையாக தீர்வு காணப்பட்ட மனுக்கள், மிக்ஜாம் புயல், தென்மாவட்டங்களில் பெருமழை வெள்ளம் ஆகியவற்றின்போது ஏற்பட்ட செலவினம் உள்பட நான் எழுப்பிய கேள்விகளுக்குப் பதில் இல்லை.

மேலும், 520-க்கும் மேற்பட்ட திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளில் 10 சதவீதம் மட்டுமே நிறைவேற்றப்பட்ட நிலையில், 90 சதவீதம் நிறைவேற்றப்பட்டதாக பச்சைப் பொய்யை முதல்வரும், அமைச்சர்களும் சொல்கின்றனர்.

காவிரி குண்டாறு திட்டத்தை நிறைவேற்ற அதிமுக ஆட்சியில் அடிக்கல் நாட்டப்பட்டது. அதற்கு இதுவரை எந்த நிதியும் ஒதுக்கப்படவில்லை. நீட் தேர்வை ரத்து செய்யும் ரகசியம் தெரியும் என விளையாட்டுத்துறை அமைச்சர் கூறியிருந்தார். இதுவரை அந்த ரகசியத்தை கண்டுபிடிக்க முடியவில்லை.

சொத்து வரி அதிகரிக்கப்படமாட்டாது என கூறிவிட்டு, வீட்டு வரி,மின் கட்டணம் என அனைத்தையும் உயர்த்தி விட்டனர். திமுக ஆட்சிஅமைந்த பிறகு என்ன புதிய திட்டங்களைக் கொண்டு வந்தனர். அதனால் மக்கள் என்ன பயன்பெற்ற னர் என தெரிவிக்கப்படவில்லை. நிதி விவகாரத்தில் கூட்டணி கட்சிகள் சேர்ந்து பெற வேண்டியதுதானே, அதற்கு நாடாளுமன்றத்தில் என்ன குரல் கொடுத்தீர்கள். மேகேதாட்டு விவகாரத்தில் ஏன் இவ்வளவு மெத்தனமாக செயல்படுகிறார்கள்.

தற்போது பாஜகவை எதிர்க் கிறோம் என முதல்வரே ஒப்புக் கொண்டுள்ளார். அதிமுகவைப் பொறுத்தவரை, கூட்டணி இருந்தாலும் இல்லாவிட்டாலும் தமிழக மக்களுக்கு சாதகமானவற்றை ஆதரிப்போம். இல்லாவிட்டால் எதிர்ப்போம். எங்களுக்கு எஜமானர்கள் தமிழக மக்கள்தான். திமுகவைப்போல பதவிக்கும் அதிகாரத்துக்கு அடிமையாக இருந்தது கிடையாது. இவ்வாறு பழனிசாமி தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in