

கோவை: பவானி ஆற்றில் உயிரிழப்பு குறித்து சர்ச்சை வீடியோ வெளியிட்டது தொடர்பாக, நடிகர் பாக்யராஜ் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
திரைப்பட நடிகர் பாக்யராஜ் சில தினங்களுக்கு முன் தனதுஎக்ஸ் தளத்தில் வீடியோ பதிவிட்டிருந்தார். அதில், "மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் அடிக்கடி ஏற்படும் உயிரிழப்புகள் தற்செயலானவை அல்ல. ஆற்றில் குளிப்பவர்களை நீருக்குள் இருக்கும் சில மர்ம நபர்கள் காலைப் பிடித்து இழுத்து மூழ்கடித்து, பாறை இடுக்கில் அவர்களது உடலை சொருகிவிடுகிறார்கள். பின்னர், பணத்தைப் பெற்றுக் கொண்டு, சில மணி நேரங்கள் தேடி உடலை மீட்டுத் தருகின்றனர். பணம் பறிக்கும் நோக்கில் இவ்வாறு செய்கிறார்கள்" எனத் தெரிவித்திருந்தார்.
அவரது இந்த வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து, கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் வெளியிட்ட அறிக்கையில், "இதுபோன்ற தகவல்கள் தவறானவை. யாரும் வதந்திகளை பரப்ப வேண்டாம்" என்று தெரிவித்திருந்தார்.
இதற்கிடையில், மேட்டுப்பாளையம் நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் மகளிர் மேம்பாட்டுச் சங்கச் செயலர் மஸ்தான் என்பவர், மேட்டுப்பாளையம் போலீஸாரிடம் நேற்றுமுன்தினம் அளித்த மனுவில்கூறியிருப்பதாவது:
இயக்குநர் பாக்யராஜ், மேட்டுப்பாளையம் பவானி ஆற்றைச் சுற்றியிருப்பவர்களை பற்றிப் பேசியுள்ளார். இவர் தெரிவித்த பொய்யான செய்தி, தமிழகம் முழுவதும்பரவி விட்டது. பாக்யராஜ் குறிப்பிட்டதுபோல, இப்படி ஒரு சம்பவம் நடந்ததாக போலீஸார் இதுவரை எந்த வழக்கும் பதிவு செய்யவில்லை. அவர் குறிப்பிட்டதுபோல பவானி ஆற்றில் செய்யவும் முடியாது.
மேட்டுப்பாளையம் பகுதி மக்களில் சிலர், காசுக்காக கொலை செய்கிறார்கள் என்று அவதூறு பரப்புவதாக அவரது தகவல் அமைந்துள்ளது. பவானி ஆற்றில் மேற்கொள்ளப்படும் பல்வேறு மீட்புப் பணிகளுக்கு, பொதுமக்கள் உதவியாக இருக்கிறார்கள். அந்தப் பணிகளில் மக்கள் ஈடுபடுவதை தடுக்கும் வகையில் பாக்யராஜின் பேச்சு உள்ளது. எனவே, வதந்தி பரப்பிய பாக்யராஜ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.