Published : 16 Feb 2024 04:00 AM
Last Updated : 16 Feb 2024 04:00 AM
திருப்பூர்: பல்லடம் அருகே பிரதமர் மோடி பங்கேற்கவுள்ள பொதுக் கூட்டத்துக்கான மேடை அமைப்பதற்கான கால்கோள் பணி நேற்று தொடங்கியது.
பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை, ‘என் மண், என் மக்கள்' பாதயாத்திரை மேற்கொண்டு வருகிறார். 234 தொகுதிகளையும் நிறைவு செய்யும் வகையில், யாத்திரையின் நிறைவு விழா மாநாடு, திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே மாதப்பூர் பகுதியில் நடைபெற உள்ளது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று பேசுகிறார். பொதுக் கூட்டத்துக்கான அரங்கம், மேடை அமைக்கும் பணிக்கான கால்கோள் விழா, மாதப்பூர் அருகே நேற்று நடைபெற்றது.
மாநிலப் பொதுச் செயலாளர் ஏ.பி.முருகானந்தம், துணைத் தலைவர் கனக சபாபதி உட்பட பலர் பங்கேற்றனர். பூஜைகளுக்கு பிறகு கால் கோள் நடப்பட்டது. இதையடுத்து செய்தியாளர்களிடம் மாநிலப் பொதுச் செயலாளர் ஏ.பி.முருகானந்தம் கூறும் போது, ‘‘வரும் 27-ம் தேதி நடைபெறவுள்ள என் மண், என் மக்கள் யாத்திரை நிறைவு விழா மாநாடு, ஓர் அரசியல் புரட்சி ஏற்படுத்தும் மாநாடாக அமையும். சுமார் 1200 ஏக்கர் பரப்பளவில் நடைபெற உள்ள இந்த மாநாட்டில், பல்வேறு அரசியல் கட்சியின் தலைவர்களும் கலந்து கொள்கின்றனர்.
இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார். கொங்கு மண்டலத்தில் பாஜகவின் எழுச்சியை காண்பிக்கக் கூடிய மாநாடாக இது இருக்கும். மாற்று கட்சியினர் மட்டுமின்றி அதிருப்தியில் உள்ள திமுகவினரும் பாஜகவில் இணைய விருப்பம் தெரிவித்து வருகின்றனர். 25-ம் தேதி திட்டமிட்டிருந்த நிலையில், தற்போது வரும் 27-ம் தேதி மோடி கலந்து கொள்ளூம் பொதுக் கூட்டம் நடைபெறுகிறது” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT