Published : 16 Feb 2024 06:06 AM
Last Updated : 16 Feb 2024 06:06 AM
சென்னை: மக்கள் தொகை பெருக்கம் காரணமாக சென்னையில் நீர்நிலைப் பகுதிகளில் கட்டிடங்கள் கட்டும் நிலை தொடர்ந்து வருவதாக பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவர் சவுமியா அன்புமணி தெரிவித்தார். கேர் எர்த் டிரஸ்ட் மற்றும் நாட்வெஸ்ட் குழு சார்பில் ‘சென்னையில் காலநிலை மாற்றம் மற்றும் தண்ணீர் சிக்கலுக்கான செயல் திட்டம்’என்ற தலைப்பில் சென்னையில் நேற்று கருத்தரங்கம் நடைபெற்றது.
கேர் எர்த் டிரஸ்ட் மூத்த ஆலோசகர் எஸ்.பாலாஜி வரவேற்புரை ஆற்றினார். கருத்தரங்கின் செயல் திட்டத்தை சிறப்பு விருந்தினர்களான மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத் தலைவர் என்.கிருஷ்ணகுமார் மற்றும் பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவர் சவுமியா அன்புமணி ஆகியோர் வெளியிட்டனர்.
கருத்தரங்கில் கிருஷ்ணகுமார் பேசும்போது,‘‘காலநிலை மாற்றத்தால் சென்னையில் அடுத்த 20, 30 ஆண்டுகளில் பல்வேறு பாதிப்புகள் உருவாகக்கூடும். குறிப்பாக தண்ணீர் பாதுகாப்பு மிகவும் முக்கியமாக உள்ளது. கோடை காலங்களில் அதிக வெப்பமும், மழைக் காலங்களில் அதிக மழையும் பருவநிலை மாற்றத்தால் ஏற்படுகிறது. அதற்கேற்ப நம்மை தயார்படுத்திக் கொள்ள வேண்டும். மழை நீர் சேகரிப்பு கட்டமைப்புகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்”என்றார்.
பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவர் சவுமியா அன்புமணி பேசியதாவது: நகரங்களில் அதிக மக்கள் வசிப்பதால் நீர்மேலாண்மை முக்கியமானது. நீர் மேலாண்மையை வைத்துதான் ஒரு சிறந்த நகரத்தை அடையாளப்படுத்த முடியும். சென்னையின் நீர்நிலைகளான கூவம், அடையாறு, கொசஸ்தலை உள்ளிட்ட ஆறுகளை தூய்மைப்படுத்தி குடிநீர் ஆதாரங்களாக மாற்ற வேண்டும்.
கோயம்பேடு பேருந்து நிலையம் 30 ஏக்கருக்கும் மேல் பரப்பளவு கொண்டது. அதில் பூங்காஅமைப்பதால் ஆயிரக்கணக்கான மரங்களை வைக்க முடியும். மேலும் மக்கள் கூடும் இடமாகவும், மக்களின் மன அழுத்தத்தை போக்கும் இடமாகவும் அந்த பூங்கா அமையும்.
மக்கள்தொகை பெருக்கம் காரணமாக சென்னையில் ஏரி நிலங்களில் வீடு கட்டக்கூடிய சூழல் தற்போதும் நிலவி வருகிறது. அதேபோல, சில கிராமங்களில் தண்ணீர் பற்றாக்குறையால் வாழ்வாதாரத்துக்காக அகதிகளாக மக்கள் இடம்பெயர்கின்றனர். இந்த நிலை தவிர்க்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT